வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு!
வங்கதேசத்தில் மேலும் ஒரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கி சூடு!
UPDATED : டிச 23, 2025 09:14 PM
ADDED : டிச 23, 2025 09:15 PM
டாக்கா:
வங்கதேசத்தில், பார்லிமென்ட் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.
மாணவர் அமைப்பின் தலைவர் ஒருவர் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மற்றொரு மூத்த தலைவர் துப்பாக்கியால் நேற்று சுடப்பட்டது பதற்றத்தை அதிகரித்துள்ளது. நம் அண்டை நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர் அமைப்பினர் கடந்தாண்டு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, ஷேக் ஹசீனா தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார். இதைத் தொடர்ந்து பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
அடுத்தாண்டு, பிப்., 12ல் வங்கதேச பார்லிமென்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அந்நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி உள்ளன.
'இன்குலாப் மஞ்ச்' என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர், அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, வங்கதேசம் முழுதும் போராட்டங்கள் வெடித்தன.
ஷேக் ஹசீனா தலைமையிலான அரசுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் ஓஸ்மான் ஹாதி, தீவிர இந்திய எதிர்ப்பாளர்.
இந்த படுகொலைக்கு பின்னால் இந்தியா இருப்பதாக, அந்நாட்டின் மாணவர் அமைப்பின் சார்பில் துவங்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான என்.சி.பி., எனும் தேசிய குடிமக்கள் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா உள்ளிட்ட சிலர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதையடுத்து, சில போராட்டக்காரர்கள் இந்திய துாதரகங்கள் மற்றும் ஹிந்து சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தினர்.
மேலும், மத நிந்தனை செய்ததாக கூறி, ஹிந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர்.
இந்நிலையில், என்.சி.பி., யின் தொழிலாளர் அமைப்பான, 'ஜதியா ஸ்ராமிக் சக்தி'யின் குல்னா பெருநகரப் பிரிவின் ஒருங்கிணைப்பாளரான முகமது மொதாலெப் சிக்தார் என்பவரை, மர்ம நபர்கள் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டனர். இதில், சிக்தார் தலையின் இடது பக்கம் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவர் அமைப்பின் கட்சியான என்.சி.பி.,யின் முக்கியத் தலைவர் மீது துப்பாக்கி சூடு நடத்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுத் தேர்தலில் அந்தக் கட்சி போட்டியிட முடியாது.
மற்றொரு முன்னாள் பிரதமரான கலீதா ஜியா கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வங்கதேச தேசியவாதக் கட்சியில் அடுத்த நிலைத் தலைவர்கள் இல்லாததால், பொதுத் தேர்தலை எப்படி சந்திக்கப் போகின்றனர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு மாணவர் போராட்டங்களில் ஈடுபட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது, பொதுத்தேர்தல் அமைதியாக நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
24 மணி நேர கெடு
'இன்குலாப் மஞ்ச்' அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த அமைப்பினர், வங்கதேச இடைக்கால அரசுக்கு 24 மணி நேரம் கெடு விதித்துள்ளனர். அந்த அமைப்பின் சார்பில், டாக்காவின் ஷாபாக் பகுதியில் ஹாதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் மாலை நடந்தது.
அதில், திரண்ட ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடையே பேசிய இன்குலாப் மஞ்ச் அமைப்பின் தலைவர்கள், முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், காலக்கெடுவும் விதித்தனர். ஹாதியைக் கொன்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
சுட்டவர் எங்கே?
மாணவர் அமைப்பினர், 24 மணி நேர கெடு விதித்துள்ள நிலையில், வங்கதேச போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., மற்றும் துப்பறிவு பிரிவினர் தெரிவித்துள்ளதாவது:
ஹாதி மீது துப்பாக்கி சூடு நடத்தியது பைசல் கரீம் மசூத் என்பவர் என அடையாளம் காணப்பட்ட போதிலும், அவரது இருப்பிடம் குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை. மேலும், குற்ற வாளி இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படும் தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர் நாட்டிற்குள்ளேயே எங்கேயேனும் பதுங்கியிருக்கலாம். இதுமட்டுமின்றி, இப்படு கொலைக்கு பின்னால் ஏதேனும் அரசியல் கட்சி இருக்கிறதா என்பது குறித்தும் இன்னும் உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
விசா சேவைகள் நிறுத்தி வைப்பு
வங்கதேசத்தின் மைமன்சிங்கில் உள்ள தீபு சந்திர தாஸ் என்ற இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரை பாதுகாக்கக் கோரியும் புதுடில்லியில் உள்ள வங்கதேச துாதரகம் முன்பாக 'அகண்ட ஹிந்து ராஷ்ட்ர சேனா' என்ற அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கூடி முழக்கங்களை எழுப்பி நேற்று போராட்டம் நடத்தினர்.
இச்சம்பவத்தால், துாதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் அச்சத்தில் இருப்பதாகவும், அங்கு போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் வங்கதேச இடைக்கால அரசு இந்தியா மீது குற்றஞ்சாட்டியது. ஆனால், இக்குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இருப்பினும், புதுடில்லியில் உள்ள வங்கதேச துாதரகம் தன் விசா மற்றும் துாதரக சேவைகளை நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

