நாட்டை கட்டமைப்பதில் இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு: துணை ஜனாதிபதி
நாட்டை கட்டமைப்பதில் இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு: துணை ஜனாதிபதி
UPDATED : டிச 23, 2025 09:15 PM
ADDED : டிச 23, 2025 09:18 PM

புதுடில்லி:
''நாட்டை கட்டமைப்பதில் இளம் அதிகாரிகளின் இளமைத் துடிப்பும், புதுமையான சிந்தனையும் இன்றியமையாதவை,'' என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
IDAS எனப்படும் இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை துறைக்கு தேர்வான இளம் அதிகாரிகள் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அவர்கள் மத்தியில் துறை ஜனாதிபதி சிபிஆர் பேசியதாவது:
இந்திய பாதுகாப்பு கணக்கு சேவை துறை 275 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. பழமையான இந்திய அரசு துறைகளில் ஒன்று.
தாரக மந்திரம்
2047 ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாறும் லட்சிய இலக்கை நோக்கி இந்தியா பயணிக்கும் நேரத்தில், இந்த தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக மாற்றுவதில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், நாட்டின் கடைகோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.
நாட்டை கட்டமைப்பதில் இளம் அதிகாரிகளின் இளமைத் துடிப்பும், புதுமையான சிந்தனையும் இன்றியமையாதவை. சேவை மனப்பான்மை மற்றும் கடமையுணர்வு ஆகியவற்றை வழிகாட்டும் மந்திரமாக இளம் அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்திய ஆயுதப்படைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதில் இந்தத் துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதுகாப்புபடைகளின் கணக்கு மற்றும் நிதி அதிகாரிகளாக , அதிகாரிகள் தங்களது கடமைகளைச் செய்யும்போது, ஆயுதப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொண்டு உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆயுதப்படைகளின் செயல்பாட்டுத் தயார் நிலையை உறுதி செய்வதற்கு விவேகமான நிதி மேலாண்மை அவசியம்.
பொது மக்களின் பணம் என்பது வரி செலுத்துவோரின் கடினமாக உழைத்து சம்பாதித்த பங்களிப்புகளை குறிக்கிறது என்பதால் நேர்மை, வெளிப்படைத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் பொறுப்பு கூறல் ஆகியவற்றில் மிக உயர்ந்த தரவுகளை பேணுவது அவசியம்.
முக்கியத்துவம்
வேகமான வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் முன்னேற்றங்களால் குறிக்கப்படும் இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான திறன் மேம்பாடு முக்கியத்துவம் வாய்ந்தது. வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொள்வதற்கு iGot கர்மயோகி போன்ற தளங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும்.
பொதுச் சேவையில் அறிவு அவசியம் என்றாலும் குணநலன்களே முக்கியம். இந்தியாவின் 140 கோடி மக்களின் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஒரு அரிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பொறுப்புகளை அவர்கள் பணிவுடனும், அர்ப்பணிப்புடன் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

