UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:25 AM

சென்னை:
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவ படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்,, பி.பிடி., பி.ஏ.எஸ்.எல்.பி., என்ற செவித்திறன், பேச்சு, மொழி நோய் குறியியல் உள்ளிட்ட, 19 வகையான துணை மருத்துவ படிப்புகள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 2,200 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 15,000த்துக்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2024 - 25ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கும் நடைமுறை துவங்கியது. ஜூன் 21 மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, மருத்துவ கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியதாவது:
துணை மருத்துவ படிப்புகளுக்கு இணைய வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அவ்வாறு இணையம் வழியாக அணுக முடியாதவர்கள், தங்களது அசல் சான்றிதழ்களுடன், அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி உதவி மையத்தில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., முதல் சுற்று கவுன்சிலிங் முடிந்த பின், துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் துவங்கும். இவ்வாறு கூறினர்.