UPDATED : மே 26, 2024 12:00 AM
ADDED : மே 26, 2024 11:41 AM

இன்ஜினியரிங் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வேலை வாய்ப்பையே பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளனர். மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, கல்வி நிறுவனங்களும் உரிய பயிற்சிகளையும், முயற்சிகளையும் மேற்கொள்கின்றன.
அதிகமான மாணவர்கள் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகளை படிப்பதால், 70 சதவீதம் பேர் ஐ.டி., நிறுவனங்களில் தான் வேலை பெறுகின்றனர். மெக்கானிக்கல், சிவில் போன்ற கோர் இன்ஜினியரிங் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் அவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறுவதற்குரிய பயிற்சிகளையும், வாய்ப்புகளையும் கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
எங்கள் கல்லூரியை பொறுத்தவரை, பிஎச்.டி., படித்தவர்கள் உட்பட பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த இன்டெல் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிக்கிறோம். புதிய சாப்ட்வேர் தயாரிக்கும் ஐ.டி., நிறுவனங்களிலேயே வேலை வாய்ப்பை பெற்றுத்தருகிறோம். கம்ப்யூட்டர் அல்லாத துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு செமஸ்டரில் ஒரு தொழில் நிறுவனம் வீதம் நேரடியாக இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுகின்றனர். அதன்படி, கல்லூரி படிப்பை நிறைவு செய்யும் முன்பே ஒவ்வொரு மாணவரும் 5 வேறுபட்ட தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெறுகின்றனர்.
மாணவர்களின் திறனுக்கு ஏற்பவும், விருப்பத்திற்கு ஏற்பவும் பல நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்றுத்தருகிறோம். தொழில்நுட்ப பூங்கா துவங்கி, பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கிறோம். நவீன உள்கட்டமைப்பு வசதிகள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், தேவையான திறன்களுக்கான பயிற்சி ஆகியவற்றால், மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாகிறது.
ஆராய்ச்சி அவசியம்
இன்று இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களில் 70 சதவீத மாணவர்கள் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கின்றனர். 20 சதவீத மாணவர்கள் மாணவர்கள் மட்டுமே முதுநிலை படிப்புகளில் சேர விரும்புகின்றனர்.
இன்ஜினியரிங் துறையில் இன்று இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு நிகராக, முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் பிஎச்.டி. படிப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும். ஆராய்ச்சிகள் அதிகமானால் தான் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும். நாட்டின் வளர்ச்சிக்கு அதிகமான கண்டுபிடிப்புகள் அவசியம். ஆகவே, முதுநிலை பட்டப்படிப்புகளை படிக்க மாணவர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு நிறைவு செய்தபிறகு தான், வேலை வாய்ப்பிற்கு செல்கின்றனர்.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நம் நாட்டிலேயே உற்பத்தி செய்வதைவிட, பெரும்பாலும் இறக்குமதி செய்கிறோம். அனைத்து கல்லூரிகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டால் தான் நம் நாட்டிலேயே உற்பத்தியை அதிகரிக்க முடியும். அதிற்கு அரசு, தமிழகத்தில் மட்டும் குறைந்தது 4 இடங்கள் ஆராய்ச்சி மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
- தங்கவேலு, தலைவர், ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோவை