UPDATED : ஜூலை 11, 2026 05:12 PM
ADDED : ஜூலை 11, 2026 05:14 PM
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அனிதாவுக்கு நீதிமன்ற பணிகள் மேற்கொள்ள சட்ட ஆலோசகர் பதவிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட எஸ்.பி.,க்களுக்கு, நீதிமன்ற பணிகள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளவும், ஆலோசனை வழங்கவும் சட்ட ஆலோசகர் பதவி, தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அனிதாவுக்கு, நீதிமன்ற பணிகள் தொடர்பான சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும், 20க்குள் தங்கள் விண்ணப்பங்களை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பிக்கும் நபர்கள், தகுதி வாய்ந்த பல்கலைக்கழகம் மூலமாக பி.எல்., அதற்கு நிகரான சட்டம் சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். குறைந்தது 5 ஆண்டுகள் உயர்நீதிமன்றம் அல்லது நீதிமன்றம் குறித்த பணிகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.
தமிழ்நாடு பார்கவுன்சிலில் பதிவு செய்த, எவ்வித குற்றவழக்குகளும் நிலுவையில் இல்லாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில், தேர்வாகும் நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம், 20,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். தேர்வானவர்களுடைய பணி திருப்தி அளிக்காத பட்சத்தில், அவருடைய ஒப்பந்தத்தை ரத்து செய்து வேறு ஒருவரை நியமிக்க மாவட்ட எஸ்.பி.,க்கு அதிகாரம் உண்டு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
