தேர்வு பட்டியல் வெளியிட்டும் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பு
தேர்வு பட்டியல் வெளியிட்டும் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் இழுத்தடிப்பு
UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 03:01 PM
மதுரை:
தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டும் அவர்களை நியமனம் செய்வதில் கல்வித்துறை இழுத்தடிக்கிறது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு 2011 முதல் டி.இ.டி., கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகள் இதுவரை 6 முறை நடந்துள்ளது. 2022ல் நடந்த தேர்வில் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றனர். பணியிடங்கள் குறைவாக இருந்ததால் டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் நியமனத் தேர்வு எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி 2023, செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு 2024 பிப்ரவரியில் நியமனத் தேர்வு எழுதியவர்களில் 3192 பேர் தகுதி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடிந்து தகுதி பெற்றோரின் தேர்வு பட்டியலையும் கல்வித்துறை வெளியிட்டது. கலந்தாய்வு மூலம் பணி நியமனம் கிடைக்கும் என எதிர்பார்த்தும் ஓராண்டு ஆகவுள்ள நிலையில் இதுவரை நியமனம் இல்லை. இதுகுறித்து கேட்டால் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை காரணம் காட்டி நியமனத்தை அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். இதனால் தகுதியுள்ளவர்கள் பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.
விடியல் கிடைக்குமா
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் 2 சதவீதம் தகுதியுள்ள, டி.இ.டி., தேர்ச்சி பெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது. அவர்கள் நீதிமன்றம் சென்றதால் தேர்வுப் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் எங்களுடன் நியமனத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியில் சேர்ந்து 6 மாதங்களுக்கு மேலாக சம்பளம் பெற்று விட்டனர். இவ்விஷயத்தில் கல்வி அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாகவே நியமனம் இழுத்தடிக்கப்படுகிறது. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்ட பின் அரிட்டாபட்டி வந்த முதல்வர் ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளோம். இனிமேலாவது விடியல் கிடைக்குமா என எதிர்பார்க்கிறோம் என்றனர்.