நிரந்தர பணியிடமாக மாற்றம் கணினி ஆசிரியர்கள் வரவேற்பு
நிரந்தர பணியிடமாக மாற்றம் கணினி ஆசிரியர்கள் வரவேற்பு
UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 03:00 PM
மதுரை:
தமிழக கல்வித்துறையில் 52 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்பட்ட உத்தரவுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் வரவேற்றுள்ளது.
இத்துறையில் 2000க்கு பின் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உருவாக்கப்பட்ட பணியிடங்களுக்கு, தற்காலிக கணக்குகள் தலைப்பில் சம்பளம் வழங்கப்படுகிறது. சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள், பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள், அலுவலர்கள் என உருவாக்கப்பட்ட இப்பணியிடங்களுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை நிதித்துறை ஒப்புதல் பெற்று தொடர் ஆணை பிறப்பிக்கப்பட்டு பின் சம்பளம் வழங்கப்படும். அடிக்கடி தொடர் ஆணை பிறப்பிப்பது தாமதமாவதால் அவர்களுக்கு சம்பள பிரச்னை ஏற்பட்டது.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 52 ஆயிரம் பணியிடங்களை நிரந்தரம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி கணினி ஆசிரியர் சங்க கவுரவ தலைவர் சங்கரலிங்கம் கூறுகையில், ஐந்து அரசாணைகளின் கீழ் வரக்கூடிய கணினி பயிற்றுநர் பணியிடங்கள் உள்ளிட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட 52 ஆயிரம் பணியிடங்கள் நிரந்தர பணியிடமாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் ஒவ்வொரு முறையும் தொடர் நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சம்பளம் பெறுவதில் தாமதமாகும் சிக்கல் இனி இருக்காது. வரவேற்கிறோம் என்றார்.