ஹைடெக்- லேப் பணியாளர்கள் நியமனம்; பள்ளிகளில் தனியார் நிறுவனம் பயிற்சி
ஹைடெக்- லேப் பணியாளர்கள் நியமனம்; பள்ளிகளில் தனியார் நிறுவனம் பயிற்சி
UPDATED : ஜூன் 22, 2024 12:00 AM
ADDED : ஜூன் 22, 2024 11:37 AM

பொள்ளாச்சி:
ஹைடெக் - லேப் கொண்ட அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கம்ப்யூட்டர் திறனை மேம்படுத்த தனியார் நிறுவனம் வாயிலாகவே பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில், பள்ளி படிப்பை முடித்ததும், உயர்க்கல்விக்கு செல்லும் போது, அதற்கான நுழைவுத்தேர்வு, போட்டித்தேர்வுகள், அலுவலகப் பணிகள் பெரும்பாலும், கம்ப்யூட்டர் சார்ந்தவையாகவே உள்ளன. இதனால், அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதற்காக, அதிக எண்ணிக்கையில் மாணவர்களை உள்ளடக்கிய அரசு பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்துக்கு தேவையான கம்ப்யூட்டர், ஸ்கிரீன் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் பராமரிப்பு உள்ளிட்டவை 'ெஹப்ரான்' நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.
அந்நிறுவனம் சார்ந்த பணியாளர்களே, பள்ளியில் பணிபுரியவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், ஹைடெக் - லேப் கொண்ட அரசுப் பள்ளிகளில், தனியார் நிறுவன பணியாளர்கள் வயிலாக, பாடவாரியாக எளிமையான முறையில் பதிவேற்றம் செய்து புரிந்து கொள்வது, ஆன்லைன் தேர்வு குறித்த தெளிவுகளை பெறுவது உள்ளிட்ட பயிற்சிகளை மாணவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அரசு பள்ளிகளில் உள்ள, உயர் தொழில்நுட்ப ஆய்வகம், தற்போது தனியார் நிறுவனம் வாயிலாக பராமரிக்கப்படுகிறது. பள்ளிகளில், பணியாளர்கள் நியமனத்துக்காக, சமீபத்தில் 'ஸ்மார்ட்போன்' வாயிலாக தேர்வு நடத்தப்பட்டது.
அதில் தேர்வானவர்கள் பள்ளியில் இணைந்துள்ளனர். அவர்களுக்கான சம்பளம், தனியார் நிறுவனம் வாயிலாக வழங்கப்படும்.தினமும், ஒரு வேளை பாடப்பிரிவு, உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தை மையப்படுத்தி நடத்தப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.