எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு வாகன வசதி செய்த வனத்துறைக்கு குவியும் பாராட்டு
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுக்கு வாகன வசதி செய்த வனத்துறைக்கு குவியும் பாராட்டு
UPDATED : ஏப் 04, 2024 12:00 AM
ADDED : ஏப் 04, 2024 05:17 PM

விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் அருகே மலைவாழ் பழங்குடியின பள்ளி மாணவ, மாணவியரை வனத்துறை வாகனத்தில் தேர்வு எழுத அழைத்து சென்ற வனத்துறையினரின் செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் காரையார் அகஸ்தியர் காணிக்குடியிருப்பில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளியில், இந்த ஆண்டு ஐந்து மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர்.
இவர்களுக்கு, அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு பள்ளி தேர்வு மையமாக உள்ளது. காலை 10 மணிக்கு துவங்கும் தேர்வுக்கு மாணவர்கள் காரையாரிலிருந்து புறப்பட்டு அம்பாசமுத்திரம் செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லை. இதனால், பள்ளி நிர்வாகம் சார்பில், முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தில், வாகன வசதி செய்து கொடுக்கும்படி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இதுகுறித்து புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குனர் இளையராஜாவிடம் முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி பேசினார். பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்தின் வாகனத்தை வழங்க புலிகள் காப்பகம் துணை இயக்குனர் இளையராஜா உத்தரவிட்டார்.
இதையடுத்து தேர்வு துவங்கிய மார்ச் 26 முதல் காரையார் அரசு பள்ளி மாணவ, மாணவியர் முண்டந்துறை வனச்சரக வாகனத்தில் அம்பாசமுத்திரம் சென்று தேர்வு எழுதி, மீண்டும் அதே வாகனத்தில் காரையாருக்கு திரும்புகின்றனர். வனத்துறையினரின் இச்செயல்பாட்டை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.