காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு பாராட்டு: நாக் கமிட்டி சான்று
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு பாராட்டு: நாக் கமிட்டி சான்று
UPDATED : டிச 24, 2024 12:00 AM
ADDED : டிச 24, 2024 08:52 PM
புதுச்சேரி:
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு நாக் கமிட்டி மீண்டும் B++ கிரேடு சான்றிதழ் வழங்கி, பாராட்டியுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழக இணைப்பு பெற்றுள்ள காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில், கலை, மனிதநேயம், வணிகம் மற்றும் அறிவியல் துறைகளில் 16 முதுநிலை படிப்புகள், 8 பி.எச்.டி., படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1,116 மாணவர்கள் படிக்கின்றனர்.
இக்கல்லுாரியை நான்காவது முறையாக ஆய்வு செய்ய முனைவர் கருணேஷ் சேக்சேனா தலைமையில், முனைவர்கள் அப்துல் வகிட் ஹஸ்மேனி, அல்கா பீஸ் மூவர் அடங்கிய நாக் கமிட்டி அமைக்கப்பட்டது.
இக்கமிட்டி கடந்த நவம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தது. தொடர்ந்து பல்வேறு துறைகளை சுற்றி பார்த்த கமிட்டியினர் கல்லுாரியின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்தனர். தொடர்ந்து இறுதி அறிக்கையை சமர்பித்தனர்.
சிறந்த கல்லுாரியாக காஞ்சிமானிவர் பட்ட மேற்படிப்பு மையத்தினை மதிப்பீடு அறிக்கை செய்த நாக் உயர்மட்ட கமிட்டி தற்போது B++ கிரேடு தர சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் இக்கல்லுாரி 2.88 மதிப்பெண் பெற்றுள்ளது.
நாக் கமிட்டி தனது ஆய்வறிக்கையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் என்.ஐ.ஆர்.எப்., கல்லுாரி சிறந்த இடத்தினை பெற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. தன்னாட்சி காரணமாக சிறந்த கல்வி திட்டத்தை போதிக்கப்படுகிறது என்றும், அனுபவம் வாய்ந்த பி.எச்.டி., முடித்த ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது.
அத்துடன் கல்லுாரி பேராசிரியர்கள் சிறந்த ஆய்வறிக்கை வெளியிடுகின்றனர். கல்லுாரியில் கிராமப்புற மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் திட்டம் சிறப்பாக உள்ளது. கல்லுாரிக்கு சீனியர் அதிகாரிகளின் சிறப்பான ஒத்துழைப்பு அளிக்கின்றனர் என்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் சில குறைகளையும் சுட்டிகாட்டி மேம்படுத்திகொள்ள நாக் கமிட்டி அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. கல்லுாரியில் சிறந்த ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும், காப்புரிமை பெறுவது குறைவாக உள்ளது. மின்-இதழ்களுக்கு குறைவாக செலவிடப்பட்டுள்ளது. நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய போதிய இடம் இல்லாதது, மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதற்கான சூழல் இல்லாதது என, முன்னேற்றம் காண வேண்டிய விஷயங்களையும் தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு விரைவில் நாக் கமிட்டி மீண்டும் B++ கிரேடு சான்றிதழ் அனுப்பி வைக்கப்பட உள்ளது. காஞ்சிமாமுனிவர் கல்லுாரியில் கடந்த 2005ம் ஆண்டு நடந்த நாக் கமிட்டியின் முதலாவது ஆய்வில் B++ கிரேடு சான்றிதழ் வழங்கி பாராட்டியது. அடுத்து 2013ம் ஆண்டு நடந்த இரண்டாவது நாக் கமிட்டி ஆய்வின்போது கல்லுாரிக்கு A கிரேடு சான்றிதழ் கொடுத்து மகுடம் சூட்டியது. கடந்த 2019ம் ஆண்டு நடந்த மூன்றாவது நாக் கமிட்டி ஆய்வில் மீண்டும் B++ கிரேடு சான்றிதழ் வழங்கி பாராட்டியது குறிப்பிடதக்கது.