UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 10:48 AM

புதுச்சேரி:
இட ஒதுக்கீட்டிற்காக அதிகரிக்கப்பட உள்ள புதிய விளையாட்டுகளின் எண்ணிக்கையை இன்னும் வெளியிடாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 1 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் கணிசமாக மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இதற்காக புதுச்சேரியில் விளையாட கூடிய 40 வகையான விளையாட்டுகள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. புதிய விளையாட்டுகளையும் சேர்த்து இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், மத்திய இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தினை பின்பற்றி காலத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு அளிக்கப்படும் விளையாட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்து கோப்பு அனுப்பியது.
ஆனால் அதிகரிக்கப்பட்ட 65 விளையாட்டுகள் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த விளையாட்டுகளுக்கு இந்தாண்டு இட ஒதுக்கீடு உண்டா என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.
எந்தெந்த விளையாட்டுகள் புதிதாக அங்கீகரிக்கப்பட உள்ளன என, விளையாட்டு துறையும், உயர் கல்வி துறையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருவதால் மாணவ, மாணவியர் குழப்பம் அடைந்துள்ளனர்.
எனவே அங்கீகரிக்கப்பட உள்ள புதிய விளையாட்டுகளின் பட்டியலை விரைவாக வெளியிட வேண்டும். அந்த விளையாட்டு மாணவர்கள் சான்றிதழ்கள் தயார் செய்ய போதிய அவகாசம் அளிக்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.