விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமத்தில் புதிய தொழில்நுட்ப பாடத்திட்டம் அறிமுகம்
விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமத்தில் புதிய தொழில்நுட்ப பாடத்திட்டம் அறிமுகம்
UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 10:46 AM
விழுப்புரம்:
விழுப்புரம் இ.எஸ்., கல்விக்குழுமத்தில் மாணவர்களுக்காக புதிய பாடத்திட்டமாக யங் இந்தியா ப்ரீ இன்ஜினியரிங் தொழில்நுட்ப படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை இ.எஸ்., கல்விக்குழும தாளாளர் செல்வமணி, 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு பிரத்யேகமாக வடிவமைத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை பள்ளி படிப்பை மையப்படுத்தியே மாணவர்கள் உயர்கல்வியில் மருத்துவம், பொறியியல் உட்பட பல பிரிவுகளில் சேர்கின்றனர். மருத்துவம் பயில உயிரியல் பாடம் எப்படி அவசியமோ அதுபோல, பொறியியல் பாடப்பிரிவுகளை கற்க பொறியியல் சார்ந்த ஆழ்ந்த அறிவு அவசியமாகும்.
இதற்கு இந்த யங் இந்தியா ப்ரீ இன்ஜினியரிங் தொழில்நுட்ப படிப்பு பொறியியல் பட்டம் பெற படிக்க மிகவும் உறுதுணையாக இருக்கும். இதில் உயர்மட்ட பேராசிரியர்களின் வழிகாட்டல், நுணுக்கமான தொழிற்நுட்ப கணினி பயிற்சிகள், உள், வெளி நாட்டு ஆய்வு பயணங்கள், கள ஆய்வுகள், பன்னாட்டு நிபுணர்களின் கருத்தரங்கம், பணி அனுபவ பயிற்சிகள், ஆங்கில மொழி பயிற்சி, சுய கற்றல் தொகுப்பு அடங்கிய கேள்வி, பதில் என பல சிறப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இது மூன்றாண்டு கொண்ட பாடத்திட்டம் ஆகும். இதை முடித்த பின், எந்த பொறியியல் கல்லுாரிகளில் வேண்டுமானாலும், 2வது ஆண்டு நேரடியாக சேர்ந்து, 3 ஆண்டுகள் படித்த பின் பொறியாளராக பட்டம் பெறலாம். இந்த பாடத்திட்டம் மூலம் மாணவர்கள் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ், மெச்சின் லியர்னிங் ஆகிய புதிய தொழில்நுட்பங்களை கற்று தொழில்நுட்ப வல்லுநராகவோ அல்லது தொழில் முனைவராகவோ உருவாக முடியும்.
பன்னாட்டு பல்கலையில் உதவி தொகை மூலம் பொறியியல் பட்டம் பெற எழுதும் கேட் நுழைவு தேர்விற்கான பயிற்சியும் இதில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.