பல்கலை ஊழியர்களுக்கு போலி சான்றிதழ் வழக்கில் தொடர்பு?
பல்கலை ஊழியர்களுக்கு போலி சான்றிதழ் வழக்கில் தொடர்பு?
UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:08 AM
கடலுார்:
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்தாண்டு ஜூன் 19ல் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் கிடந்தன.
இவ்வழக்கில், முக்கிய குற்றவாளியான புதுச்சேரி, காமராஜ் சாலை சத்தியா நகர் ஒஸ்தின் ராஜா, அவரது தம்பி கந்தமங்கலம் நெல்சன், சிதம்பரம் எம்.கே., தோட்டம் தமிழ்மாறன், அண்ணாமலை பல்கலை முன்னாள் ஊழியர் கொத்தங்குடி அசோக்குமார், தி.மு.க., மருத்துவரணி திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் தங்கதுரை ஆகியோரை கடந்த 19ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
பின், தங்கதுரையை வேப்பூருக்கு அழைத்துச் சென்று, அவரது வீட்டில் சோதனை செய்தனர். அங்கு, யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் எம்.டி., படித்ததாக தங்கதுரை வைத்திருந்த போலி சான்றிதழை போலீசார் கைப்பற்றினர்.
அசோக்குமாரிடம் நடத்திய விசாரணையில், போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை பரங்கிப்பேட்டை புதுக்குப்பம் கடற்கரையில் எரித்து, தண்ணீரில் கரைத்தது தெரியவந்தது.
இந்த மோசடியில், அண்ணாமலை பல்கலையில் பணிபுரியும் சில ஊழியர்களுக்கு தொடர்புடையதாக, அவர்களின் பெயர்களை அசோக்குமார், போலீசில் கூறியுள்ளார்.
அவர்களிடம் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி., போலீசார் திட்டமிட்டுள்ளனர்.