குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவ கால்நடை பிரிவு பங்கேற்பு
குடியரசு தின விழா அணிவகுப்பில் ராணுவ கால்நடை பிரிவு பங்கேற்பு
UPDATED : ஜன 02, 2026 08:36 AM
ADDED : ஜன 02, 2026 08:38 AM
புதுடில்லி:
குடியரசு தின விழா அணிவகுப்பில், நம் ராணுவத்தின் கால்நடை படைப் பிரிவு முதன்முறையாக பங்கேற்கிறது. இதற்காக, டில்லி கடமைப் பாதையில் ஒட்டகங்கள், குதிரைகள், ராணுவப் பிரிவைச் சேர்ந்த உள்நாட்டு நாய் இனங்கள் உள்ளிட்டவை அணிவகுப்பு ஒத்திகையில் நேற்று ஈடுபட்டன.
அலங்கார ஊர்தி நாட்டின் குடியரசு தின விழா, ஜன., 26ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லி கடமைப் பாதையில் முப்படைகளின் அணிவகுப்பும், மாநிலங்கள், மத்திய அரசு துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடத்தப்படுகிறது. இதில், மாநில அரசுகளின் சாதனைகள், பாரம்பரியங்களை விளக்கும் வகையில், அலங்கார ஊர்திகள் அனுமதிக்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான அணிவகுப்பில், நம் ராணுவத்தின் கால்நடைப் பிரிவு முதன்முறையாக பங்கேற்கிறது. இதில், ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விலங்குகள் இடம்பெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, லடாக்கின் குளிர் பாலைவனங்களில், 15,000 அடி உயரத்தில், 250 கிலோ எடையைச் சுமந்து செல்லும் திறன் உடைய பாக்டிரியன் ஒட்டகங்கள் இடம்பெற உள்ளன. மைனஸ் 40 டிகிரி குளிரையும் தாங்கி, சியாச்சின் போன்ற பகுதிகளில் ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படும், லடாக்கின் பூர்வீக இனமான சன்ஸ்கார் பொனி குதிரைகளும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளன.
வேட்டைப் பறவை தவிர, நம் நாட்டின் சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் போன்ற பூர்வீக இனங்களைச் சேர்ந்த நாய்களும் அணிவகுப்பில் இடம்பெற உள்ளன. இதே போல், கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வேட்டைப் பறவைகளும் இடம் பெற உள்ளன. இவை அனைத்தும், இயந்திரங்களால் செல்ல முடியாத இமயமலையின் செங்குத்தானப் பகுதி கள் மற்றும் பனிச்சிகரங்களில் நம் ராணுவத்தின் முதுகெலும்பாக செயல்படுகின்ற ன.
ராணுவம் என்பது வெறும் வீரர்கள் மற்றும் இயந்திரங்கள் சார்ந்தது மட்டுமல்ல; இக்கட்டான சூழலில் தோளோடு தோள் நின்று பணியாற்றும் இந்த விலங்குகளும் ராணுவத்தின் அங்கமே என்பதை இந்த அணிவகுப்பு உலகிற்கு உணர்த்தும்.

