வேதி பொருளால் கண் பாதித்த அரசு பள்ளி மாணவிக்கு இழப்பீடு
வேதி பொருளால் கண் பாதித்த அரசு பள்ளி மாணவிக்கு இழப்பீடு
UPDATED : ஜன 02, 2026 08:47 AM
ADDED : ஜன 02, 2026 08:47 AM

மதுரை:
அரசு பள்ளி ஆய்வகத்தில், வேதிப்பொருள் பட்டதில் கண் பாதிப்படைந்த மாணவிக்கு, இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தாக்கல் செய்த மனுவில், 'என் மகள் ஒரு அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். 2024 பிப்., 9ல், வேதியியல் ஆய்வகத்தில் என் மகள் இருந்தபோது, பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவால் அவரது வலது கண்ணில் சோடியம் ஹைட்ராக்சைடு பட்டது. பாதிப்பு, மருத்துவ செலவிற்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பள்ளி கல்வித்துறை செயலர், இயக்குநர், கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், ''ஏற்கனவே, 50,000 ரூபாய் கருணை தொகை வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கூறுகிறது. மாணவிக்கு ஒரு கண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பார்வைத்திறன் முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு இழப்பீடாக, ஒரு லட்சத்து 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இதில் ஏற்கனவே வழங்கிய தொகை ஈடுசெய்து கொள்ளப்படும்,'' என, உத்தரவிட்டார்.

