எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு போட்டிகள்
எம்.ஓ.பி., வைஷ்ணவா கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு போட்டிகள்
UPDATED : செப் 27, 2026 02:16 PM
ADDED : செப் 27, 2026 02:18 PM
நுங்கம்பாக்கம்:
நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான 'ஓலாப் - 2026' எனும் செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பங்களை மையமாக கொண்ட நிகழ்வுகள் நேற்று நடந்தன.
சென்னையைச் சேர்ந்த 16 கல்லுாரிகளில், ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரியின் 'சாங்க்யா கிளப்' சார்பில், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நிஜ வாழ்க்கை பிரச்னைகளுக்கு தீர்வு காணும், புதுமைச் சவால் போட்டி நடத்தப்பட்டது.
அதாவது, பார்வை திறன் குறைபாடுடையோர், 'ஆன்லைன்' தளத்தில் உணவு ஆர்டர் செய்வதற்கு செயலி, காய்கறி தேவையுள்ள பகுதிகளை கண்டறிந்து அவற்றை விற்பதற்கான வலைதளம் ஆகியவற்றை செயல்முறை விளக்கம் அளித்தனர்.
அதே போல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது; பொருட்களை எவ்வாறு சந்தைப்படுத்துவது என போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லுாரிகளுக்கு இடையே 'ஹேக்கத்தான்' மற்றும் 'ப்ராம்ப்டத்தான்' ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 'ப்ராம்ப்ட்' பயன்படுத்தி, ஒரு புகைப்படத்தை வைத்து, அதேபோல் ஒரு புகைப்படத்தை செயற்கை நுண்ணறிவில் கொண்டு வருவதற்காக இப்போட்டி நடத்தப்பட்டது.
எதிர்காலத்திற்கு அவசியமான தேவைகள் உட்பட பல விஷயங்களுக்காக நடத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, கருத்தரங்கும் நடத்தப்பட்டது.
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப துணைத் தலைவர் கல்யாண சக்ரவர்த்தி, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன துணைத் தலைவர் சீனிவாசன் வரதநாராயணன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
