கல்லுாரி மாணவர்களுக்கு 7 நாட்கள் வழிகாட்டும் பயிற்சி கல்வி இணை இயக்குநர் வலியுறுத்தல்
கல்லுாரி மாணவர்களுக்கு 7 நாட்கள் வழிகாட்டும் பயிற்சி கல்வி இணை இயக்குநர் வலியுறுத்தல்
UPDATED : ஜூலை 06, 2024 12:00 AM
ADDED : ஜூலை 06, 2024 09:55 AM

மதுரை:
அனைத்து கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஏழு நாட்கள் முழுமையான வழிகாட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என மதுரை மண்டல கல்லுாரிக் கல்வி இணை இயக்குநர் (ஆர்.ஜே.டி.,) குணசேகரன் வலியுறுத்தினார்.
அவர் கூறியதாவது:
மதுரை மண்டலத்திற்கு உட்பட்டு 29 அரசு, 42 அரசு உதவிபெறும், 100 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன. நேற்று முதல், முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கியுள்ளன. அரசு கல்லுாரிகளில் நிரப்பப்படாத இடங்களுக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கல்லுாரிக் கல்வித்துறை இயக்குநர் கார்மேகம் அனைத்து கல்லுாரிகளிலும் ஜூலை 3 முதல் 10 வரை முதலாமாண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளார்.
இதை அனைத்து கல்லுாரிகளிலும் பின்பற்ற வேண்டும்.
குறிப்பாக, கல்லுாரி துவங்கிய நாட்களிலேயே பாடம் பகுதிக்குள் நுழைந்து அச்சமும், மலைப்பும் மாணவர்களுக்கு ஏற்பட்டுவிடாமல் ஆசிரியர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு சமூகத்தின் அனைத்து துறைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள சாதனையாளர்கள், ஆசிரியர்கள், ஆய்வறிஞர்கள், அரசியல்வாதிகள், விஞ்ஞானிகள், கல்வி வழிகாட்டுநர்கள், தன்னம்பிக்கை பேச்சாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலரையும் அழைத்து உரையாடலாகவும், வினாடி வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளாகவும் ஒருங்கிணைத்து நடத்த வேண்டும்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளால் மாணவர்களுக்கு வளமான கல்விச் சூழலை ஏற்படுத்த முடியும். எனவே முதல்வர்கள், நிர்வாகிகள் உரிய திட்டமிடலுடன் பயிற்சி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.