ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி துறைக்கு இணை இயக்குனர்கள்
ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி துறைக்கு இணை இயக்குனர்கள்
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:11 PM

சென்னை:
ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி துறைகளின் வளர்ச்சி பணிகளுக்காக, அக்கல்லுாரி முதல்வர்கள், துறையின் இணை இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைக்கும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படுகிறார். அதேநேரம், இணை இயக்குனர்களாக, சித்தா மற்றும் யோகா துறை டாக்டர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள், அலோபதி சிகிச்சைக்கு மாற்றாக சித்தா மருத்துவத்தை தான் அதிகம் முன்னிறுத்துவதாக, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி டாக்டர்கள் குற்றம் சாட்டினர். இதனால், தங்கள் துறைக்கு உதவி இயக்குனர் அந்தஸ்தில் இருந்து, இணை இயக்குனர் அந்தஸ்து வழங்க கோரிக்கை வைத்தனர்.
அதன்படி ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி சிகிச்சை முறையை மேலும் மேம்படுத்தும் வகையில், அத்துறை கல்லுாரி முதல்வர்களாக இருப்பவர்களை, இணை இயக்குனர்களாக நியமித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரிய சாஹு அரசாணை வெளியிட்டுள்ளார்.