ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்: ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
UPDATED : செப் 23, 2024 12:00 AM
ADDED : செப் 23, 2024 04:10 PM

சிவகங்கை:
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு உடனே கொண்டு வர வேண்டும் என சிவகங்கையில் நேரடி நியமன முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ஏ.ராமு தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்காததால், பணி ஓய்வு பெற்ற ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், பணப்பலன்களை பெற முடியாமல் உள்ளனர். அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு சார்பில், மாதம், 18,000 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த திட்டத்தை உடனே ரத்து செய்து, பள்ளிகளுக்கு நிரந்தர முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
பள்ளிகளில் காலியான அனைத்து ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். 2009 ஜூன் 1க்கு முன் பணியில் சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாட்டை களைய வேண்டும். இதனால், ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 15,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
நான்காண்டுகளுக்கும் மேலாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படாத சரண்டர் விடுப்பை உடனே விடுவிக்க வேண்டும். சமூக விரோதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆசிரியர் சமுதாயத்தை பாதுகாக்க, ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.