நர்சிங் கல்லுாரியில் கொடூரம்; 5 கேரள மாணவர்கள் கைது
நர்சிங் கல்லுாரியில் கொடூரம்; 5 கேரள மாணவர்கள் கைது
UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:07 PM
கோட்டயம்:
கேரளாவில், அரசு மருத்துவக் கல்லுாரியில் படிக்கும் ஜூனியர் மாணவர்களை அடித்து துன்புறுத்தி, நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து, ராகிங் செய்த ஐந்து சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள அரசு நர்சிங் கல்லுாரியில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் முதலாமாண்டு படித்து வருகின்றனர். இவர்களை, அதே கல்லுாரியில் மூன்றாமாண்டு படிக்கும் ஐந்து சீனியர் மாணவர்கள், 2024 நவம்பர் முதல் ராகிங் செய்து கொடுமைப்படுத்தி உள்ளனர்.
ஜூனியர் மாணவர்களை நிர்வாண கோலத்தில் நிற்க வைத்து, உடற்பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் டம்பள்ஸ் உபகரணங்களை, பிறப்புறுப்பில் கட்டி தொங்க விட்டு சீனியர் மாணவர்கள் துன்புறுத்தி உள்ளனர்.
காம்பஸ் எனப்படும் கணிதப் படிப்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணத்தால், ஜூனியர்களை தாக்கி சீனியர் மாணவர்கள் காயப்படுத்தி உள்ளனர்.
காயத்தால் அவர்கள் அலறியபோது, காயம் ஏற்பட்ட இடத்தில், எரிச்சல் தரக்கூடிய லோஷனை சீனியர்கள் தடவி உள்ளனர். மேலும், அலறித் துடித்த ஜூனியர்களின் வாயில், லோஷனை வைத்து அவர்கள் அடைத்துள்ளனர்.
இவ்வளவு கொடுமைகளை அனுபவித்து வந்த ஜூனியர் மாணவர்களிடம், ஞாயிற்றுக் கிழமைகளில் மது அருந்த பணம் கேட்டும் சீனியர்கள் மிரட்டி வந்துள்ளனர். பணம் கொடுக்காதவர்களை அவர்கள் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இந்த விவகாரத்தை வெளியே சொன்னால், கல்லுாரியில் படிக்க முடியாதபடி செய்து விடுவோம் என்றும் ஜூனியர் மாணவர்களை சீனியர்கள் மிரட்டி வந்துள்ளனர். இந்த ராகிங் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஜூனியர் மாணவர் ஒருவர், இதுகுறித்து தன் தந்தையிடம் கூறினார்.
அவர் அளித்த யோசனையின்படி, பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதன்படி வழக்கு பதிந்த போலீசார், ராகிங் செய்த ஐந்து சீனியர் மாணவர்களை நேற்று கைது செய்தனர்.