சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: அடுத்த ஆண்டு துவங்க திட்டம்
சென்னையில் ஆஸ்திரேலிய பல்கலை: அடுத்த ஆண்டு துவங்க திட்டம்
UPDATED : டிச 14, 2025 09:10 AM
ADDED : டிச 14, 2025 09:10 AM

சென்னை:
உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, சென்னை மற்றும் மும்பையில் தங்கள் பல்கலையை நிறுவுகிறது.
இதுகுறித்து, மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை துணை வேந்தர் அமித் சக்மா கூறியதாவது:
உலகின் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் ஒன்றாக மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை திகழ்கிறது. தற்போது, சென்னை மற்றும் மும்பையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், எங்கள் பல்கலையை நிறுவ உள்ளோம். சென்னை போரூரில் உள்ள டி.எல்.எப்., 'சைபர் சிட்டி'யில், 47,000 சதுர மீட்டர் அளவில், பல்கலை உருவாக்கப்படுகிறது. 2026 ஆகஸ்ட் மாதம் பல்கலையை திறக்க திட்டமிட்டு வருகிறோம்.
இந்த பல்கலையில், இளநிலை அறிவியல், இளநிலை வணிகவியல், எம்.பி.ஏ., முதுநிலை தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என, ஏழு பாடங்கள் துவங்கப்படும்.
பல்கலையை சென்னையில் துவங்குவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் எங்கள் பல்கலைக்கு அதிகளவு படிக்க வருகின்றனர். மேலும், தமிழக அரசுக்கும், மேற்கு ஆஸ்திரேலிய அரசுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. ஆஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்புகள் குறைவு. ஆனால், சென்னை யில் தொழில் வாய்ப்புகள் அதிகம். இதனால், மாணவர் களுக்கு நேரடியாக தொழில் பயிற்சிகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

