ஆயுஷ் பாட புத்தகம்: என்.சி.இ.ஆர்.டி., யு.ஜி.சி., இணைந்து உருவாக்குகிறது
ஆயுஷ் பாட புத்தகம்: என்.சி.இ.ஆர்.டி., யு.ஜி.சி., இணைந்து உருவாக்குகிறது
UPDATED : அக் 08, 2025 09:58 PM
ADDED : அக் 08, 2025 10:01 PM

சென்னை:
பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சுகாதார கல்வி பாடத்திட்டத்தை சேர்க்க, ஆயுர்வேத பாட புத்தகங்களை உருவாக்கும் பணியில், என்.சி.இ.ஆர்.டி மற்றும் யு.ஜி.சி., இணைந்து செயல்பட உள்ளன. பள்ளி மற்றும் கல்லுாரிகளில், சுகாதார கல்வியை பிரதானமாக சேர்க்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தில், நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் குறித்த பாடங்களை, 'ஆயுஷ்' என்ற பெயரில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான பாடப்புத்தகங்களை உருவாக்கும் பணியில், பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை வடிவமைக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான என்.சி.இ.ஆர்.டி., பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. ஆகியவை இணைந்து உள்ளன.
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கு, ஆராய்ச்சி முடிவு சான்றுகள் வாயிலாக, சர்வதேச அங்கீகாரம் பெறும் முயற்சியில், ஆயுஷ் அமைச்சகம், மத்திய ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில், மருந்து நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.
உள்நாட்டில், அதன் நம்பகத்தன்மையை அதிகரிக்க, பொது சுகாதார கட்டமைப்பை எளிமையாகவும், மலிவாகவும் வழங்கும் முயற்சியில், அரசு ஈடுபட்டுள்ளது. அதை, பாடத்திட்டங்களின் வாயிலாக கட்டமைக்கும் பணியில், ஆயுஷ் அமைச்சகம், என்.சி.இ.ஆர்.டி - யு.ஜி.சி.,யை இணைத்துள்ளது.