UPDATED : அக் 08, 2025 10:01 PM
ADDED : அக் 08, 2025 10:03 PM

சென்னை:
“செயற்கை நுண்ணறிவை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்,” என தேசிய தகவல் மையத்தின் பொது இயக்குநரும், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலருமான அபிஷேக் சிங் பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யின், வாத்வானி தரவு அறிவியல் துறை மற்றும் செராய் அமைப்புகளின் சார்பில், 'செயற்கை நுண்ணறிவு ஆளுமை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
அதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கூடுதல் செயலர் அபிஷேக் சிங் பேசியதாவது:
தொழில் துறை, கல்வி துறை, சமூகம் ஆகியவற்றின் பங்களிப்போடு, செயற்கை நுண்ணறிவுக்கு பாதுகாப்பான கட்டமைப்பை உருவாக்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. செயற்கை நுண்ணறிவு சார்ந்த நிர்வாகத்தை வரையறுத்து, தெற்கு நாடுகளுக்கு ஒரு முன்னோடியான கட்டமைப்புகளை உருவாக்க துவங்கி உள்ளது.
செயற்கை நுண்ணறிவை பொறுப்பாகவும், பாதுகாப்பாகவும் கையாளும் வகையில், விரைவில் விதிமுறைகள் உருவாக்கப்படும். அதற்கான பங்களிப்பை வழங்கவே, பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களால், இதுபோன்ற கருத்தரங்கங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி பேசுகையில், “அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போதும் சாதக, பாதகங்கள் இருப்பது இயல்பு. அந்த வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திலும் உண்டு. அதை பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் ஆக்க, இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும்,” என்றார்.