உயர்கல்வி ஆராய்ச்சியை வலுப்படுத்தப் பிரதமருக்குப் பாலகுருசாமி கோரிக்கை கடிதம்
உயர்கல்வி ஆராய்ச்சியை வலுப்படுத்தப் பிரதமருக்குப் பாலகுருசாமி கோரிக்கை கடிதம்
UPDATED : மார் 10, 2026 02:08 PM
ADDED : மார் 10, 2026 02:12 PM

கோவை:
'விக்சித் பாரத் 2047' எனும் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவது அவசியம் என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம்:
நாடு முழுவதும் பல பல்கலைகளில், உயர்கல்வி நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதே போல, பல பல்கலைகளில் ஆய்வகங்கள், கருவிகள் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லை. இதனால், தரமான ஆராய்ச்சியை உருவாக்க பல நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.
மேலும், உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் தற்போது சுமார் 28 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020ன் படி, 2035க்குள் 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். பல்கலை ஆசிரியர்கள், உட்கட்டமைப்பில் பெரிய அளவிலான விரிவாக்கம் இதற்கு தேவைப்படுகிறது.
இந்தியா கல்விக்காக உள்நாட்டு மொத்த உற்பத்தியில், சுமார் 2.8 சதவீதம் மட்டுமே செலவிடுகிறது. தேசியக் கல்விக் கொள்கையில், 6 சதவீதம் செலவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய முதலீடு ஜி.டி.பி.,யில் ஒரு சதவீத்திற்கும் குறைவாக உள்ளது, ஆனால், முன்னேறிய நாடுகள் 2 முதல் 3 சதவீதம் அல்லது அதற்கு மேல் முதலீடு செய்கின்றன.
பல உயர்கல்வி நிறுவனங்களில் தலைமைத்துவத்தின் தரம் குறித்த கவலைகளும் அதிகரித்து வருகிறது. தலைமைப் பொறுப்புகளில் திறமை மற்றும் வெளிப்படைத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட தேர்வு முறைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
பல்கலைகளில் உள்ள ஆசிரியர் காலியிடங்களை அவசரமாக நிரப்பி, ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வகங்களை வலுப்படுத்து வேண்டும். போதுமான முதலீடு இல்லாமல் கல்வித் துறையில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்துவது கடினம். கல்வியில் தேசிய முதலீட்டை ஜி.டி.பி., யில் 6 சதவீதம் வரை உயர்த்துவதுடன், ஆராய்ச்சி நிதியை ஜி.டி.பி.,யில் குறைந்தது 2 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும்.
கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் மாநில பல்கலைகளுக்கு போதுமான நிதி ஆதரவு வழங்க வேண்டும்.
வளர்ந்த இந்தியா 2047 என்ற கனவு வெறும் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமே நனவாகாது. அது கல்வியறிவு பெற்ற இளைஞர்கள், புதுமைமிகு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைகளால் தான் உருவாகும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

