பாலாஜி வித்யா பீத் - வி.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
பாலாஜி வித்யா பீத் - வி.ஐ.டி., புரிந்துணர்வு ஒப்பந்தம்
UPDATED : செப் 12, 2025 12:00 AM
ADDED : செப் 12, 2025 07:44 AM
பாகூர் :
பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகம், சென்னை வி.ஐ.டி., இடையே, மருத்துவ புதுமைகள், இடைத்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாலாஜி வித்யாபீத் நிர்வாக பிரிவு கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இரண்டு உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து கூட்டாண்மை, மருத்துவ சாதனங்கள், உயிரித் தொழில்நுட்பம், உயிர் மருத்துவ பொறியியல், பயோஇன் பார்மாடிக்ஸ், மருத்துவ பரிசோதனைகள், இன்க்யுபேஷன் ஆதரவு மற்றும் கூட்டு திட்ட நிதி போன்ற துறைகளில் கவனம் செலுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பாலாஜி வித்யாபீத் பல்கலை கழக துணை வேந்தர் பிஸ்வாஸ், வி.ஐ.டி., துணை வேந்தர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், மாணவர் பயிற்சிகள், கூட்டு ஆராய்ச்சி வெளியீடுகள், ஆலோசனை வாய்ப்புகள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
இந்த இரு நிறுவனங்களின் நிபுணர்கள் இணைந்து உருவாக்கிய கூட்டு பணிக்குழு, ஒப்பந்தத்தின் செயல்பாட்டை கண்காணித்து, ஆராய்ச்சி முடிவுகள் நடைமுறைக்கு வரும் வகையில் உறுதி செய்யும்.
இது ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கை முன்னெடுத்து, இந்தியாவை சுகாதார தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முன்னோடியாக நிலை நிறுத்தும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.