பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ.,வுக்கு தடை
பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ.,வுக்கு தடை
UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 12:48 PM

சென்னை:
தமிழக பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ., பாடங்களுக்கு அண்ணா பல்கலை வழங்கும் அனுமதியை நிறுத்தி வைக்க உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இத்தகவலை அனைத்து அரசு, உதவி பெறும், சுயநிதி பிரிவு கல்லுாரிகளுக்கு தெரிவிக்க கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரவு
தேசிய அளவில் கலை அறிவியல் கல்லுாரிகளில் நடத்தப்பட்டு வரும் பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ., ஒப்புதல் பெற வேண்டும். பொறியியல் கல்லுாரிகளிலும் இப்படிப்புகளை துவங்கலாம் என, ஏ.ஐ.சி.டி.இ.,யின், 2024 - 2027 கையேட்டில் குறிப்பிடப்பட்டது. இதற்கு தனியார் கலை மற்றும் அறிவியல், சுயநிதி பிரிவு கல்லுாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இது தொடர்பாக, டில்லி உச்ச நீதிமன்றத்தில் நாடு முழுவதிலும் இருந்து 63 வழக்குகள் தொடரப்பட்டன. இதை ஒரே வழக்காக, டில்லி உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற முடிவுக்கு உட்பட்டு, இதுதொடர்பான பரிசீலனை செய்ய வேண்டும் என்பதால் அண்ணா பல்கலைக்கு உட்பட்ட பொறியியல் கல்லுாரிகளில் பி.பி.ஏ., பி.சி.ஏ., பாட பிரிவுகளை புதிதாக துவங்கும் பல்கலை அனுமதியை நிறுத்தி வைக்குமாறு உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அறிவுறுத்தல்
இதுதொடர்பாக கல்லுாரி கல்வி கமிஷனர் சுந்தரவல்லி, அனைத்து மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், மண்டலங்களுக்கு உட்பட்ட அரசு, உதவிபெறும், சுயநிதி கல்லுாரிகளுக்கு இதுகுறித்த தகவலை கடிதமாக இணை இயக்குனர்கள் அனுப்பி வைக்க அவர் அறிவுறுத்தியுள்ளார்.