மாணவர்களின் போராட்டத்தால் வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா
மாணவர்களின் போராட்டத்தால் வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா
UPDATED : ஆக 12, 2024 12:00 AM
ADDED : ஆக 12, 2024 10:38 AM
டாக்கா:
வங்கதேசத்தில், பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து, அந்நாட்டின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக, மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவரும் நேற்று ராஜினாமா செய்தார்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலை மற்றும் கல்வியில் அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்தது.
இந்த போராட்டத்தில், மாணவர்கள், போலீசார் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் கையை மீறி போனதை அடுத்து, அங்கு பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா, பதவியை ராஜினாமா செய்து, நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
கெடு
இதையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு சமீபத்தில் பதவியேற்றது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக, அவர் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வங்கதேச உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் மற்றும் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு விசுவாசமாக உள்ள நீதிபதிகள் ராஜினாமா செய்யக் கோரியும், நீதித் துறையை மறு சீரமைக்கக் கோரியும், கடந்த ஐந்து நாட்களாக, பாகுபாட்டுக்கு எதிரான மாணவர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று தலைநகர் டாக்காவில் உள்ள உச்ச நீதிமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, நீதிபதிகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், மதியம் 1:00 மணிக்குள் ராஜினாமா செய்யும்படி, காலை 11:00 மணி அளவில் கெடு விதித்தனர்.
நுாற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், ராணுவ வீரர்கள் உச்ச நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டனர். உச்ச நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நடக்கவிருந்த முக்கிய கூட்டத்தை, தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் ஒத்தி வைத்தார். மேலும் இது தொடர்பாக, மற்ற நீதிபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்ற வளாகத்தில், தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் நேற்று கூறியதாவது:
நாட்டின் அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பைக் கருதி, தலைமை நீதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். ராஜினாமா செய்வதற்கு சில நடைமுறைகள் உள்ளன.
அவற்றை நிறைவு செய்து் ராஜினாமா கடிதத்தை அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு அனுப்பி வைத்துள்ளேன். மற்ற நீதிபதிகள் ராஜினாமா செய்வரா என்பது தெரியாது; அது அவர்களின் முடிவு.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒப்புதல்
இதன் பின், இடைக்கால அரசின் சட்ட ஆலோசகர் பேராசிரியர் ஆசிப் நஸ்ருல், சமூக வலைதளத்தில் கூறியதாவது:
தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் சட்ட அமைச்சகத்துக்கு வந்துள்ளது. எந்தவிதமான தாமதமுமின்றி இந்த கடிதம் அதிபர் முகமது ஷஹாபுதீனுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என, நம்புகிறோம். தலைமை நீதிபதி மட்டுமே ராஜினாமா செய்துள்ளார். மற்ற நீதிபதிகளின் ராஜினாமா பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முயற்சி முறியடிப்பு
பி.எஸ்.எப்., எனப்படும், எல்லை பாதுகாப்பு படையின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் கூச் பெஹாரில் உள்ள இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையில், 1,000க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் நேற்று குவிந்தனர். இந்தியாவுக்குள் தங்களை அனுமதிக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களின் உதவியுடன் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதிகளை, 24 மணி நேரமும் பி.எஸ்.எப்., வீரர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.