தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்காக மாணவர்களுக்கு வங்கி கணக்கு
தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்காக மாணவர்களுக்கு வங்கி கணக்கு
UPDATED : ஆக 05, 2024 12:00 AM
ADDED : ஆக 05, 2024 09:56 AM

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரிகளில், தமிழ்ப்புதல்வன் திட்ட பயனாளியாகும் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு, புதுமைப்பெண் திட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் பயின்று, கல்லுாரிகளில் உயர்கல்வி கற்கும் மாணவியருக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம்போன்று, மாணவர்களுக்காக ஆகஸ்ட் 9 முதல் தமிழ்ப் புதல்வன் திட்டம் துவங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த மாநில அளவில் மேற்பார்வையாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் பணிகள், அனைத்து கல்லுாரிகளிலும் நடைபெற்றுவருகிறது. புதிய திட்டத்தில், 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் பங்கேற்று, வங்கி கணக்கு துவங்குவது குறித்தும், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்தும் விளக்கினார்.
ஸ்டேட் வங்கி சார்பில், மாணவர்களிடமிருந்து ஆவணங்கள் பெறப்பட்டு, வங்கி கணக்கு துவங்கப்பட்டது. மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலர் ராணி உள்பட அலுவலர்கள் பங்கேற்றனர்.