தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் 25 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டை
தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம் 25 மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டை
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 08:23 AM
ஊட்டி:
ஊட்டி அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் புதல்வன் திட்டத்தை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் துவக்கி வைத்து, 25 மாணவர்களுக்கு வங்கி கணக்கு பற்று அட்டைகள் வழங்கினார்.
ஆறாம் வகுப்பு முதல், பிளஸ்-2 வரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும், 'தமிழ் புதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின், கோவையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு, மாநில அரசு, 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், ஊட்டியில் நடந்த காணொலி காட்சி ஒளிப்பரப்பில் பங்கேற்ற, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், மொத்தம், 14 கல்லுாரியில் பயிலும், 1,090 மாணவர்கள் திட்டத்தில் பயனடைந்துள்ளனர். முதற்கட்டமாக, தமிழ் புதல்வன் திட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில், 190 மாணவர்களுக்கு, 1000 ரூபாய் வீதம், 10.90 வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதியாண்டு முதல் புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர் வேறு எந்த உதவி தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்திலும் பயன்பெறலாம். இனிவரும் காலங்களில், தகுதியான மாணவர்கள் தங்களது கல்லுாரிகள் மூலம், யூ.எம்.ஐ.எஸ்., தளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.
மாவட்ட கலெக்டர் தலைவர் லட்சுமி பவ்யா, கூடுதல் கலெக்டர் கவுசிக், முதன்மை கல்வி அலுவலர் கீதா உட்பட பலர் பங்கேற்றனர்.