ஏ.ஐ.சி.டி.இ., வரம்பிற்குள் பி.சி.ஏ.,; மேல்முறையீடு செய்ய முடிவு
ஏ.ஐ.சி.டி.இ., வரம்பிற்குள் பி.சி.ஏ.,; மேல்முறையீடு செய்ய முடிவு
UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 11:33 AM
கோவை:
உயர் கல்வித்துறையில் கலை அறிவியல் சார்ந்த கல்வி நிறுவனங்களை யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழுவும், பொறியியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அமைப்பும் கட்டுப்படுத்துகிறது.
இந்நிலையில், தொழில்நுட்பம் சாராத, பி.பி.ஏ.,- பி.சி.ஏ., மற்றும் பி.எம்.எஸ்., படிப்புகளை பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரிகளில் துவங்க ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, விண்ணப்பங்களும் பெறப்பட்டு வருகின்றன.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் செயல்பாடு தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில், தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் நலச்சங்கம், மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரிகள் மேலாண்மை சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோன்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பல்வேறு அமைப்புகள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கலானது. ஏ.ஐ.சி.டி.இ., கோரிக்கையின்படி, பல மாநிலங்களில் தாக்கலான ரிட் மனுக்களையும், ஒரே மனுவாக ஒருங்கிணைத்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
ஏ.ஐ.சி.டி.இ.,க்கு எதிராக நாடு முழுதும் கல்லுாரி சங்கங்கள், பல்கலை அமைப்புகளின் 64 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தனியார் கல்லுாரிகள் மற்றும் பல்கலை அமைப்புகளின் எதிர்ப்பிற்கிடையே, பி.பி.ஏ.,- பி.சி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப்பித்த பொறியியல் கல்லுாரிகளில் போதிய ஆய்வுகள் இன்றி அவசர கதியில் அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.,யின் மேற்கண்ட செயல்பாடு பெற்றோர், ஆசிரியர்கள், கல்லுாரி நிர்வாகங்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு, தமிழ்நாடு தனியார் சுயநிதி கலை அறிவியல் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏ.ஐ.சி.டி.இ., செயல்பாடுகளுக்கு எதிராகவும், இறுதி முடிவு வரும் வரை இதில் வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் நிறுத்தவும், தேசிய அளவில் தனியார் கல்லுாரிகள் சங்கங்கள், பல்கலை அமைப்புகள் ஒருங்கிணைந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.