பி.இ., பி.டெக்., சேர்க்கை 36,731 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
பி.இ., பி.டெக்., சேர்க்கை 36,731 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
UPDATED : ஜூலை 18, 2025 12:00 AM
ADDED : ஜூலை 18, 2025 10:47 PM

சென்னை:
தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் முதல் சுற்று கலந்தாய்வில், 36,731 மாணவர்களுக்கு, கல்லுாரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தரவரிசை பட்டியல் அடிப்படையில் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, கடந்த 7, 8ம் தேதிகளில் நடந்தது. அதில், மாற்றுத்திறனாளி பிரிவில், 80 இடங்கள்; விளையாட்டு வீரர்கள் பிரிவில், 37 இடங்கள்; முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில், எட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, 9 முதல் 12ம் தேதி வரை நடந்த 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில், 322 மாற்றுத்திறனாளிகள், 414 விளையாட்டு வீரர்கள், 133 முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அதைத்தொடர்நது, 14ம் தேதி துவங்கிய முதல் சுற்று கவுன்சிலிங்கில், நேற்று முன்தினம் மாலை வரை, மாணவர்கள் தங்களின் விருப்ப கல்லுாரிகளை பதிவு செய்தனர். அவர்களுக்கு, நேற்று காலை தற்காலிக ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன.
தற்காலிக இடஒதுக்கீடு செய்யப்பட்ட 36,731 மாணவர்களின் விபரங்களை, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில், நேற்று காலை 10:00 மணிக்கு வெளியிட்டுள்ளது.
இந்த மாணவர்கள் இன்று மாலை 5:00 மணிக்குள், கல்லுாரியை உறுதி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, நாளை காலை 10:00 மணிக்கு, இறுதி ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்படும்.
அதன்படி, இறுதி ஒதுக்கீட்டு ஆணையை பதிவிறக்கம் செய்து, நாளை முதல் 23ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும். தற்காலிக ஒதுக்கீட்டை மறுத்தவர்களுக்கு, வரும் 26ம் தேதி காலை 10:00 மணிக்கு மீண்டும் ஒதுக்கீடு வழங்கப்படும்.