கூடுதலாக ரூ.20 கோடி கொடுங்கள் அரசுக்கு தாட்கோ நிர்வாகம் கடிதம்
கூடுதலாக ரூ.20 கோடி கொடுங்கள் அரசுக்கு தாட்கோ நிர்வாகம் கடிதம்
UPDATED : ஜூலை 19, 2025 12:00 AM
ADDED : ஜூலை 19, 2025 08:58 AM
சென்னை:
நடப்பாண்டு நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்திற்கு, கூடுதலாக 20 கோடி ரூபாய் நிதி வழங்கும்படி, தாட்கோ நிர்வாகம் அரசிடம் கேட்டுள்ளது.
நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூக பெண்கள் பயன்பெறும் வகையில், நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு நிலம் வாங்க, ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 19.98 கோடி ரூபாய் மானியத்தில், 408 பெண்கள் பயனடைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், இத்திட்டத்திற்கு 20 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது. அத்தொகை முழுதும் செலவிடப்பட்ட நிலையில், கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, தாட்கோ நிர்வாகம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தாட்கோ அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில், பெண்கள் விவசாய நிலம் வாங்க, நிலத்தின் சந்தை மதிப்பில், 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக, ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
கடந்த 2023 - 2024ம் நிதியாண்டில், 175 விவசாயப் பெண்கள் பயனடைந்துள்ளனர். நடப்பாண்டு ஒதுக்கப்பட்ட 20 கோடி ரூபாய் நிதி, மூன்று மாதங்களுக்குள், பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில், பெண்கள் அதிகம் விண்ணப்பித்து வருகின்றனர். எனவே, அரசிடம் கூடுதலாக 20 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளோம்.
இவ்வாறு கூறினர்.

