UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:15 PM
சென்னை:
பி.எட்., தேர்வு வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ், பி.எட்., இரண்டாம் ஆண்டுக்கான, நான்காவது செமஸ்டர் தேர்வு, 27ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், இணைந்த பள்ளிக்கூடம் உருவாக்கல் என்ற பாடப்பிரிவிற்கான தேர்வு நடந்தது.
இந்த தேர்வுக்கான வினாத்தாள், தேர்வுக்கு முந்தைய நாளே சமூக வலைதளங்களில் வெளியானது. இது, தேர்வு எழுத காத்திருந்த மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, கசிந்த வினாத்தாளுக்கு பதிலாக, மாற்று வினாத்தாள் உடனடியாக தயாரிக்கப்பட்டு, தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால், திட்ட மிட்டபடி, தேர்வர்கள் தேர்வை எழுதினர். இருப்பினும், ஏற்கனவே கசிந்த வினாத்தாளில் இருந்து, சில குறிப்பிட்ட வினாக்கள், புதிய வினாத்தாள்களிலும் இடம் பெற்றிருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையைச் சேர்ந்தவர்களே, வினாத்தாளை கசிய விட்டதாகவும், குறிப்பிட்ட தொகைக்கு அவற்றை விற்பனை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனால், ஆசிரியர் கல்வியியல் பல்கலை பொறுப்பு பதிவாளராக இருந்த ராமகிருஷ்ணனை, அந்தப் பதவியில் இருந்து விடுவித்து, புதிய பொறுப்பு பதிவாளராக ராஜசேகரனை நியமித்து, பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.