வழிகாட்டுகிற ஆசிரியர்களை விட வாழ்ந்து காட்டுகிற ஆசிரியர்களே நல்லாசிரியர்கள்
வழிகாட்டுகிற ஆசிரியர்களை விட வாழ்ந்து காட்டுகிற ஆசிரியர்களே நல்லாசிரியர்கள்
UPDATED : செப் 05, 2024 12:00 AM
ADDED : செப் 05, 2024 10:59 AM
மேட்டுப்பாளையம் :
வழிகாட்டும் ஆசிரியர்களை விட, வாழ்ந்து காட்டும் ஆசிரியர்கள் தான் நல்லாசிரியர்கள், என, சச்சிதானந்த ஜோதி பள்ளி செயலாளர் கவிதாசன் பேசினார்.
மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
இதில் கூட்டமைப்பு பள்ளிகள் சார்பில், 17 பள்ளிகளில் இருந்து தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, நல்லாசிரியர் விருது - 2024 வழங்கப்பட்டது. விழாவில் துவக்க நிகழ்ச்சியாக ராதாகிருஷ்ணன், சுவாமிஜி சச்சிதானந்த ஆகியோர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
விழாவுக்கு சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி செயலர் கவிதாசன் தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு மனிதரும் பணம் சம்பாதித்தல், பதவி, புகழ்ச்சி ஆகியவை பெறுவதால் மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த மகிழ்ச்சியை நோக்கி ஓடுகின்றனர். மாணவர்களுக்கு வழிகாட்டுகின்ற ஆசிரியர்களை விட, வாழ்ந்து காட்டுகின்ற ஆசிரியர்களே நல்லாசிரியர்கள். வேலைக்கான கல்வி, தேர்வுக்கான கல்வி, வாழ்க்கைக்கான கல்வி என மூன்று கற்றல் முறைகள் உண்டு.
மாணவர்களுக்கு வழக்கமான கற்றல் முறை இல்லாமல், சற்று வித்தியாசமான முறையில், அவர்களுக்கு கல்வி கற்றுத் தர வேண்டும். அதிகம் படித்தால் தான் சிந்தனை வளரும்.
எனவே மாணவர்களுக்கு சிந்திக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவரும் டாக்டராகவும், என்ஜினியராகவும், தொழில் அதிபராகவும் வர வேண்டும் என ஆசிரியர்கள் நினைப்பதுடன், நல்ல மனிதர்களாக வர வேண்டும் எனவும் நினைக்க வேண்டும்.
அதற்குத் தகுந்தாற் போல் வாழ்க்கை கல்வியையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு செயலாளர் பேசினார்.
விழாவில் கோவை சகோதயா கூட்டமைப்பு பள்ளிகள் அமைப்பின் தலைவரும், பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளியின் முதல்வருமான கிரீஸ் ஈஸ்வரன், ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி பேசினார். பள்ளி முதல்வர் உமா மகேஸ்வரி வரவேற்றார். கல்வி ஆலோசகர் கணேசன் பேசினார்.
பள்ளி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஷீலா கிரேஸ், திலகவதி, கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.