திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திண்டிவனம் அரசு கல்லுாரியில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
UPDATED : செப் 05, 2024 12:00 AM
ADDED : செப் 05, 2024 10:58 AM
திண்டிவனம்:
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் 4,000 மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். ஆரம்பத்தில் ஷிப்டு முறையில் இயங்கிய கல்லுாரி சமீபத்தில் முழு நேர கல்லுாரியாக மாற்றப்பட்டது. இதற்கு மாணவர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 10:00 மணியளவில், கல்லுாரியில் மீண்டும் ஷிப்டு முறையை கொண்டு வரவேண்டும், கல்லுாரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி, நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
மாணவர்கள் போராட்டத்திற்கு, கல்லுாரி விரிவுரையாளர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர். தகவலறிந்து வந்த ரோஷணை இன்ஸ்பெக்டர் தாரனேஸ்வரி மாணவர்கள், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நாராயணனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதல்வர் தரப்பில் ஷிப்டு முறையில்தான் கல்லுாரி இயங்கும் என்பதில் உறுதியாக இருந்ததால், 3 மணி நேரமாக மாணவர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.