கல்லுாரி காலத்திலேயே லட்சியம் இலக்கை தீர்மானிக்க வேண்டும்
கல்லுாரி காலத்திலேயே லட்சியம் இலக்கை தீர்மானிக்க வேண்டும்
UPDATED : செப் 05, 2024 12:00 AM
ADDED : செப் 05, 2024 10:57 AM
கோவை:
கல்லுாரி காலத்திலேயே வாழ்க்கை லட்சியம், இலக்கை தீர்மானிக்க வேண்டும் என அரசு கலைக்கல்லுாரி முதல்வர் எழிலி பேசினார்.
கோவை அரசு கலைக் கல்லூரியில், குடிமை பணி தேர்வுக்கு, நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச பயிற்சி நேற்று துவங்கியது.
கல்லூரி முதல்வர் எழிலி பயிற்சி வகுப்பை துவக்கி வைத்து பேசுகையில், அரசு கலை கல்லூரியில் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் மத்திய, மாநில அரசு பணிகளில் பணிபுரிந்து வருகின்றனர். இந்தாண்டு, கல்லூரியில் இடம் பெறுவதற்கு கடும் போட்டி இருந்தது.
கல்லூரியில், இளநிலை பாடப்பிரிவுகளில் உள்ள, 1,433 இடங்களுக்கு, ஏறக்குறைய, 37 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே, தங்களது வாழ்க்கை லட்சியத்தை, இலக்குகளை தீர்மானிக்க வேண்டும். இலக்குகளை அடைய தேவையான திறமைகளையும், திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும், என்றார்.
அரசு கலைக்கல்லூரி அரசியல், அறிவியல் துறை தலைவர் கனகராஜ், அரசு கலை கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முதலாம் ஆண்டு கலை, வணிகம், அறிவியல் துறைகளை சேர்ந்த மாணவர்கள், இலவச பயிற்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.