UPDATED : ஜன 20, 2025 12:00 AM
ADDED : ஜன 20, 2025 09:12 AM
மதுரை :
விண்ணப்பிக்காத ஒருவருக்கு தமிழக அரசின் விருது வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாரதியார் விருது பெற தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தமிழக அரசு அறிவித்தது. மதுரை வழக்கறிஞரும், பாரதியார் சிந்தனை மன்ற செயலருமான லட்சுமி நாராயணன் விண்ணப்பித்தார். கபிலன் என்பவருக்கு விருது வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.
இது குறித்து லட்சுமி நாராயணன் கூறியதாவது:
விருதுக்கு விண்ணப்பித்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தேன். என் பெயர் உட்பட 30 பேர் பட்டியலை அளித்தனர். ஆனால், பட்டியலில் பெயரே இல்லாதவருக்கு விருது வழங்குவதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாரதி பெயரில் அமைப்பு நடத்தி வருகிறேன். எனக்குதான் விருது தரவேண்டும் என கூறவில்லை. ஆனால், விண்ணப்பிக்காத ஒருவரை தேர்வு செய்தது எப்படி?
பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜகுமார் சென்னையில் வசிக்கிறார். அவருக்கு விருது வழங்க, கடந்த ஆண்டு வலியுறுத்தினோம். அவர் விண்ணப்பிக்கவே இல்லை; அதனால் விருது தர இயலாது என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.
அந்த விதி ஒரே ஆண்டில் கைவிடப்பட்டதா? நீதி கேட்டு வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு லட்சுமி நாராயணன் கூறினார்.