பி.எஸ்.ஜி.ஆர்., கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
பி.எஸ்.ஜி.ஆர்., கல்லூரியில் பாரதியார் பிறந்தநாள் விழா
UPDATED : டிச 12, 2025 07:57 AM
ADDED : டிச 12, 2025 07:57 AM
கோவை:
பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை மற்றும் தாவரவியல்துறை இணைந்து மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவை 'ஞான நல்லறம் வீர சுதந்திரம்' எனும் தலைப்பில் கொண்டாடியது.
கல்லூரியின் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லுாரியின் செயலர் யசோதா தேவி தலைமை வகித்து, 'பாரதி கண்ட புதுமைப் பெண்கள்' குறித்து சிறப்புரையாற்றினார்.
முதல்வர் ஹாரத்தி, இன்றைய பெண்கள் அனைவரும் பாரதி கண்ட புதுமைப் பெண்களாக வாழ்ந்து காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
சவால்களை வாய்ப்புகளாக மாற்றுங்கள் ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கவிதாசன், 'நல்லதோர் வீணை செய்தே' என்ற தலைப்பில் பேசுகையில், ''பிரச்னைகளை வாய்ப்புகளாக மாற்ற கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது எதுவும் சாத்தியமாகும். சிந்தனையை செயலாகவும், செயலை பழக்கமாகவும், அந்த பழக்கத்தை வாழ்க்கையாகவும் மாற்ற தெரிந்தால் வெற்றி நிச்சயம்,'' என்றார்.
கோவை வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தின், விஞ்ஞானி மும்மது அலி நவுஷாத், 'பூமியைக் காப்போம், வாழ்க்கையை நேசிப்போம்' என்னும் தலைப்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கருத்துரையை வழங்கினார்.
தொடர்ந்து சிஸ்டம் அகாடமியின் நிறுவனர் கல்யாணசுந்தரம், 'பாரதி என்றொரு மானுடன்' எனும் தலைப்பில், பெண்களுக்கு அறிவின் உச்சநிலையான ஞானத்தை வைத்த பாரதி, ஒரு சிறந்த மானுடன் என்று பேசினார்.
தமிழ்த் துறைத் தலைவர் மணிமேகலை நன்றி கூறினார். தாவரவியல் துறைத் தலைவர் கிருஷ்ணவேனி உள்ளிட்ட துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.

