இருமொழி கொள்கை: மாநில அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம்
இருமொழி கொள்கை: மாநில அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் அவசியம்
UPDATED : டிச 13, 2024 12:00 AM
ADDED : டிச 13, 2024 06:33 PM

கோவை:
தமிழகத்தில், இருமொழிக் கொள்கையால் இளைஞர்கள் பலர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். மும்மொழிக் திட்டத்தை, மாநில அரசு ஏற்கவேண்டியது அவசியம், என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் பாலகுருசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, பாலகுருசாமி கூறியதாவது:
தமிழை தவிர, மற்றொரு இந்திய மொழியை கற்பதற்கு கடந்த, 50 ஆண்டுகளாக வாய்ப்பு மறுத்து வரும் ஒரே மாநிலம் தமிழகம்தான். இருமொழிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட ஏராளமானோரில் நானும் ஒருவன்.
இருமொழிக் கொள்கை ஆதரிப்பால், ஏழை, கிராமப்புற, வசதியற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஆனால், வசதியான நகர்புற மாணவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் சேரும் மாணவர்கள், விரும்பும் மொழியை கூடுதலாக கற்கும் சுதந்திரத்தை பெற்றுவிடுகின்றனர்.
இரட்டை நிலைப்பாடு
மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் பல தலைவர்களின் வாரிசுகள் ஹிந்தி மொழியை படித்தனர்; தற்போதும் படிக்கின்றனர். பல தலைவர்கள் நடத்தும் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை பின்பற்றுவதாகவே உள்ளது. தலைவர்களின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது.
மும்மொழித்திட்டத்தில், பல பாராட்டதக்க அம்சங்கள் உள்ளன. சமூக இணக்கம், மொழிவழிப் பன்முகத்தை இக்கல்வித்திட்டம் காக்கிறது. குறுகிய அரசியல் காரணமாக, குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு மாறாக மேலும் ஒரு மொழியைக் கற்றுக்கொண்டால், வாழ்க்கை விரிவடைந்து விடியல் காண்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைக்கும்.
தேசிய கல்விக்கொள்கை ஒரு குறிப்பிட்ட மொழியை திணிக்கவில்லை என்றாலும், நாடு முழுவதம் பரவலாக பேசப்படும் ஹிந்தி போன்ற மொழியை கற்பதால், இளைஞர்களுக்கு ஏராளமான பயன்கள் கிடைக்கும்.
உதாரணமாக, நாட்டுப்பற்று, தேசிய நல்லிணக்கம், தேச ஒருமைப்பாடு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும். தனிநபர் ஆளுமையை மேம்படுத்தும். வேலைவாய்ப்பு, வணிகம், வர்த்தகம், தொழில் தொடர்பாக மாநிலங்கள் இடையே வாய்ப்புகளை விரிவாக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் சேருபவர்களுக்கு இது வசதியாக அமையும்.
மும்மொழி அவசியம்
ஹிந்தி மொழி அரசியமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழி என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தமிழக தலைவர்கள், 1968ம் ஆண்டு அப்போதைய முதல்வர் அண்ணா துரை கடைபிடித்த இருமொழிக்கொள்கையை சுட்டிக்காட்டுகின்றனர். அதன்பின், 50 ஆண்டுகள் கடந்துவிட்டது; மாற்றம், வளர்ச்சிகள் பல ஏற்பட்டுள்ளன. வர்த்தகம், வணிகம், தொழில் மட்டுமின்றி பண்பாடு, அரசியல் சூழல் என அனைத்தும் மாறியுள்ளன.
தொலைநோக்கு பார்வை கொண்ட அண்ணா துரை இப்போது இருந்திருந்தால், இன்றைய சூழலில் தனது நிலைப்பாட்டை கட்டாயம் மாற்றி இருப்பார். பிற மாநில மக்களை போன்று, தமிழக மக்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கவேண்டும். மாநில அரசு தற்போதைய சூழல்களை புரிந்து, இளைஞர்களின் நலன் கருதி இருமொழிக் கொள்கையை கைவிட்டு, மும்மொழித்திட்டத்தை ஏற்கவேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.