விடுதி உணவில் பிளேடு, புழு; உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
விடுதி உணவில் பிளேடு, புழு; உஸ்மானிய பல்கலை மாணவர்கள் போராட்டம்
UPDATED : மார் 14, 2025 12:00 AM
ADDED : மார் 14, 2025 12:11 PM
ஹைதராபாத்:
விடுதியில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததால், ஆத்திரமடைந்த உஸ்மானியா பல்கலை மாணவர்கள், சாப்பாட்டு தட்டு மற்றும் குழம்பு பாத்திரத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் உஸ்மானியா பல்கலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், பெரும்பாலான மாணவர்கள், அங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
இங்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மார்ச் 11 இரவு வழங்கப்பட்ட உணவில், பிளேடு இருந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், சாப்பாடு தட்டுகள் மற்றும் பாத்திரங்களுடன் பல்கலைக்கு செல்லும் வழியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு உள்பட வேறு ஏதேனும் அருவருக்கத்தக்க பொருள் தொடர்ந்து தென்பட்டு வருவதாகவும், சுகாதாரமான உணவு வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், பல்கலை நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், மாணவர்களின் உயிரில் பல்கலை நிர்வாகம் விளையாடுவதாகவும், துணை வேந்தரை சந்தித்து இது தொடர்பாக முறையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.