UPDATED : பிப் 13, 2025 12:00 AM
ADDED : பிப் 13, 2025 10:11 PM
பெங்களூரு:
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக, தனி உறைவிட பள்ளி திறக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவர்களுக்கு கல்வி கிடைக்க செய்யும் நோக்கில், மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிகள் போன்று, தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காகவே, தொழிலாளர் நலத்துறை சார்பில் உறைவிட பள்ளி திறக்க, முடிவு செய்துள்ளோம்.
இத்திட்டத்தால் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் பயன் அடைவர். உறைவிட பள்ளிகளில் தரமான கல்வியுடன், அனைத்து வசதிகளும் இருக்கும். விரைவில் பள்ளி திறக்கும் பணிகள் துவக்கப்படும்.
கர்நாடக தொழிலாளர் நல வாரியம் சார்பில், தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகைக்காக 2024 - 25ல், 23 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மாநிலம் முழுதும் ஊக்கத்தொகை கேட்டு, 32,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இதில் தகுதியான 25,000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.