பஞ்சாபில் ஒரே நேரத்தில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர் அச்சம்
பஞ்சாபில் ஒரே நேரத்தில் பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர் அச்சம்
UPDATED : டிச 13, 2025 08:23 PM
ADDED : டிச 13, 2025 08:24 PM
அமிர்தசரஸ்:
பஞ்சாப் அமிர்தசரஸில் ஒரே நாளில் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்களால் பெற்றோர் பீதிக்குள்ளாகினர்.
அமிர்தசரஸில் செயல்படும் பல்வேறு தனியார் பள்ளிகளின் இ மெயில் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது. அதில், பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, பீதி அடைந்த பள்ளி நிர்வாகங்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தன. பள்ளிகளில் இருந்து பெற்றோர்களுக்கு விஷயத்தை கூறி, குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஒரே நேரத்தில் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களை வெளியே அனுப்பியதால் பல இடங்களில் குழப்பமான சூழல் நிலவியது.
பள்ளி நிர்வாகங்களின் தகவலின் பேரில் உடனடியாக சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு போலீசார் தனித்தனி குழுக்களாக பிரிந்து சென்றனர். போலீசாருடன், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினரும் சோதனையில் இறங்கினர். பல மணி தேடுதல் வேட்டைக்கு பின்னர் எந்த வெடிகுண்டும் எந்த பள்ளியில் இருந்தும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பதை ஊர்ஜிதம் செய்ய போலீசார், இமெயில் அனுப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் கமிஷனர் குர்பிரீத் சிங் புல்லர் கூறியதாவது:
நகரின் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியாக போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை விசாரித்து வருகிறோம் என்றார்.
பெற்றோர் அனுராதா கன்னா என்பவர் கூறுகையில், பள்ளியில் இருந்து எங்களுக்கு இந்த விஷயத்தை கூறினர். என் குழந்தையை பார்க்க உடனடியாக நாங்கள் விரைந்து பள்ளிக்குச் சென்றேன். பஹல்காம், டில்லி தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் எங்களுக்கு பீதியை தருகின்றன என்று கூறினார்.

