புத்தகம் உண்டு...தேர்வு இல்லை: கல்வித்துறையில் வினோதம்
புத்தகம் உண்டு...தேர்வு இல்லை: கல்வித்துறையில் வினோதம்
UPDATED : ஏப் 13, 2024 12:00 AM
ADDED : ஏப் 13, 2024 10:52 AM

காரைக்குடி:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்பட்டு அதற்கான தேர்வு முறையாக நடைபெறாதது குறித்து பெற்றோர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தொடக்கப் பள்ளிகளுக்கான, முழு ஆண்டுத் தேர்வு கடந்த ஏப்.2ம் தேதி தொடங்கியது. 1 முதல் 3ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கிலம்கணிதம் உள்ளிட்ட தேர்வு முடிந்த நிலையில், பிற தேர்வு நடத்தப்படவில்லை.
1 முதல் 2ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சூழ்நிலையியல் பாடப்புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 3ம் வகுப்புக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளியில் பாடங்களும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் ஆங்கிலம் கணித தேர்வு மட்டும் நடத்தப்பட்ட நிலையில் சூழ்நிலையியல், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படவில்லை.
மாணவர்களின் அறிவுத்திறனை மென்மேலும் வளர்த்திடும் நோக்கில் பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சி மேற்கொண்டு, பாடப் புத்தகங்களை தயார் செய்து மாணவர்களுக்கு வழங்குகிறது. மாணவர்களின் கற்றல் திறனை அறிய தேர்வு என்பது முக்கியமானதாகும்.
தேர்வு நடத்தினால் மட்டுமே மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்படும். ஆனால், பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு அதற்கான தேர்வு முறையாக நடத்தப்படவில்லை. தேர்வு நடைபெறாதது பெற்றோர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
சாக்கோட்டை வட்டார கல்வி அலுவலர் ரெக்ஸ் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தேர்வு தொடர்பான சுற்றறிக்கை வந்தது. அதனடிப்படையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது, என்றார்.