வரும் கல்வியாண்டில் 43 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
வரும் கல்வியாண்டில் 43 பள்ளிகளில் காலை உணவு திட்டம்
UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 12:25 PM
நாமக்கல்:
வரும் கல்வியாண்டில், ஊரக பகுதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு உதவி பெறும், 43 பள்ளிகளில், 2,426 மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுபடுத்துப்படுகிறது என, கலெக்டர் உமா கூறினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக முதல்வரின், காலை உணவுத்திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், முதல்வரின் காலை உணவுத்திட்டம், ஊரக பகுதிகளில் அனைத்து வட்டாரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்துப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.
கொல்லிமலை வட்டாரத்தில், 41 தொடக்கப்பள்ளிகளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 1,588 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், 2022 செப்., 16 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.தொடர்ந்து, 15 ஒன்றியங்களை சேர்ந்த, 674 பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரையிலான, 28,957 மாணவ, மாணவியர், 15 டவுன் பஞ்.,ல், 59 பள்ளிகளில், 3,819 மாணவர், 5 நகராட்சிகளில், 52 பள்ளிகளில், 6,363 மாணவ, மாணவியர்.
கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு அருகே உள்ள, நாமக்கல் மாவட்டத்தின், 3 டவுன் பஞ்.,களில், 17 பள்ளிகளில், 1,062 மாணவர்கள் பயன்பெறும் வகையில், 2023 ஆக., 25ல் விரிவுபடுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 843 பள்ளிகளில், 40,201 மாணவ, மாணவியர், முதல்வரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன் பெற்று வருகின்றனர். வரும் கல்வியாண்டில், ஊரக பகுதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அரசு உதவி பெறும், 43 பள்ளிகளில், 2,426 மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுபடுத்துப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.