குலுக்கலில் பிரிட்டன் விசா இந்தியர்களுக்கு வாய்ப்பு
குலுக்கலில் பிரிட்டன் விசா இந்தியர்களுக்கு வாய்ப்பு
UPDATED : ஜூலை 16, 2025 12:00 AM
ADDED : ஜூலை 16, 2025 12:53 PM
லண்டன்:
இந்திய இளம் தொழில்முறை நிபுணர்கள் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் தங்கி வேலை பார்க்க அல்லது உயர் படிப்பு படிக்க, குலுக்கல் முறையில் வழங்கப்படும் சிறப்பு விசாவுக்கு ஜூலை 22ல் துவங்கி 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் மற்றும் இந்தியா இடையேயான ஒப்பந்தப்படி, இளம் தொழில்முறை நிபுணர்களுக்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 3000 விசாக்கள் நம் நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். முதல் கட்ட குலுக்கல், பிப்ரவரியில் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட குலுக்கலில் பங்கேற்க, ஜூலை 22ல் துவங்கி 24 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் பங்கேற்கும் இந்திய இளைஞர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இளநிலை பட்டம் அல்லது அதற்கு மேல் பெற்றிருக்க வேண்டும். வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 2.7 லட்சம் ரூபாய் சேமிப்பு இருக்க வேண்டும்.
தேவையான தகவல்களுடன் பிரிட்டன் வெளியுறவுத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பினால், இரண்டு வாரங்களுக்குள் முடிவுகள் மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கப்படும். அதிலிருந்து 90 நாட்களுக்குள் விசா நடைமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.