கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு
UPDATED : ஜன 21, 2026 04:48 PM
ADDED : ஜன 21, 2026 04:49 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் உயர்கல்வி உதவி தொகை பெறுவோரின் குழந்தைகளுக்கு 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி, சென்னையில் உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகம் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு நிபந்தனைகள், தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் முறையான பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு, பாலிடெக்னிக், டிப்ளமோ, ஐ.டி.ஐ., படிப்போர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் உயர்கல்வி பயில்வதற்கான உதவிதொகை பெற்றிருத்தல் வேண்டும்.
இல்லையேல் உதவிதொகை பெற விண்ணப்பித்திருக்க வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளரின் இரு குழந்தைகள் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் உயர்கல்வி உதவித் தொகை பெறும் குழந்தைகள் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளரான தங்களின் தந்தை அல்லது தாயோடு அனைத்து அசல் ஆவணங்களுடன் விழுப்புரம், ரைபிள் ரேஞ்ச், வி.மருதுார், சாலாமேடு, வ.உ.சி., நகர், என்ற முகவரியில் இயங்கும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து பயிற்சிக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

