UPDATED : ஜன 22, 2025 12:00 AM
ADDED : ஜன 22, 2025 11:33 AM

மாணவ, மாணவியர் சர்வதேச அளவிலான சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும், அனைத்து தரப்பினரது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் கேம்ப்ரிட்ஜ் மதிப்பீட்டு முறை, கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டம், பிரிட்ஜ் கோர்ஸ், ஏர்லி இயர் போன்ற பல்வேறு திட்டங்கள் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் திறம்பட செயல்படுத்தப்படுகின்றன.
மொழித்திறன் வளர்ப்பு
21ம் நூற்றாண்டு திறன் வளர்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், போட்டித் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, இந்திய மாணவ, மாணவிகளின் ஆங்கில மொழித்திறன் வளர்க்கும் வகையில் அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சமீபத்திய ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் உள்ள மாணவர்களின் ஆர்வத்திற்கு ஏற்பவும் திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
'பிரிட்ஜ் கோர்ஸ்' போன்ற திட்டங்கள் வாயிலாக, உள்நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் போட்டியிடுவதற்கான ஆர்வமும், தகுதியும் மேம்படுகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கீழ் அத்தகைய திட்டங்கள் செயல்படுவதால், பாடத்திட்டங்கள் தொடர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
ஆர்வம் மிகுந்த 'ஸ்டெம்'
கேம்பிரிட்ஜ் ஐ.ஜி.சி.எஸ்.இ., மற்றும் சர்வதேச ஏ.எஸ்., மற்றும் 'ஏ' லெவல் ஆகிய தேர்வுகளில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகியவை மிகவும் பிரபலமான பாடங்களாக உள்ளன. கடந்த 2024ம் ஆண்டு மார்ச் தேர்விற்கு 76,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். இது அதற்கு முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் அதிகமாகும். 'ஸ்டெம்' மற்றும் தொடர்புடைய துறைகளில் வலுவான ஆர்வத்தை இன்றைய மாணவர்கள் பெற்றுள்ளனர் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.
ஆகவே, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை கொண்ட 'ஸ்டெம்' பாடத்திட்டங்களில் திறம்பட செயல்படும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதையும் ஆய்வுகள் உணர்த்துவதால், வேலை வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இன்றைய இளைஞர்கள் பருவநிலை மாறுபாடு சார்ந்த வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு பெறும் வகையிலும் பயிற்சி வழங்கப்படுகிறது. இவைதவிர, பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆங்கில மொழி கற்பித்தல் சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரபலமான துறைகள்
பொருளாதாரம், பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.சி.டி., ஆகியவை இந்திய மாணவர்களிடையே மிகவும் பிரபலமான முதல் 5 துறைகளாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தொடர்ந்து, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தரவு அறிவியல், ஏ.ஐ., மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற புதிய பாடங்களைத் தேர்வு செய்கின்றனர். இது தகவல் தொழில்நுட்ப துறையில், இந்திய இளைஞர்களின் வளர்ந்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது.
-அருண் ராஜாமணி, நிர்வாக இயக்குனர், கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் & அசெஸ்மெண்ட், தெற்கு ஆசியா.