பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை குறைப்பு கோர முடியுமா? நீதிபதி அறிவுரை
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தண்டனை குறைப்பு கோர முடியுமா? நீதிபதி அறிவுரை
UPDATED : ஆக 23, 2024 12:00 AM
ADDED : ஆக 23, 2024 08:55 AM
சென்னை:
நாகை மாவட்டம், கீழ்வேளூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்; இவரது மனைவி, தலைமை ஆசிரியையாக உள்ளார். ஒரு வழக்கு தொடர்பாக சம்மன் வழங்க, நீதிமன்ற பெண் ஊழியர் வந்தார்.
அதை, தலைமை ஆசிரியர் வாங்க மறுத்தார். நீதிமன்ற ஊழியர் வற்புறுத்தவே, அங்கு வந்த வெங்கடேசன், அவரை தாக்கி உள்ளார். சம்மனை வாங்கி கிழித்துள்ளார்.
இதையடுத்து, நீதிமன்ற பெண் ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, வெங்கடேசனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், கீழ்வேளூர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மன்னிப்பு
வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வெங்கடேசன் மனுத் தாக்கல் செய்தார். மனுவை, நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு:
தன் தவறை உணர்ந்து, மனுதாரர் மன்னிப்பு கோருவதாக, அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதை பதிவு செய்த பின், தண்டனை குறைப்புக்கான பேரம் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
விசாரணை நீதிமன்றம், அதற்கான மனுவை ஏற்று, சட்டப்படி நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நீதிமன்றம் மேல் உத்தரவு பிறப்பிக்க வேண்டியதிருக்காது. ஆனால், அது நடக்கவில்லை.
தண்டனை குறைப்புக்கான பேரம் அறிமுகம் செய்ததன் நோக்கமே, விரைவான விசாரணையை உறுதி செய்யவும், வழக்குச் செலவை குறைக்கவும் தான். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், மனு அளிக்கும்பட்சத்தில், அதற்கான நடைமுறை துவங்கும்.
கடந்த மாதம், பாரதிய நியாய சன்ஹிதா என்ற புதிய சட்டம் அமலுக்கு வந்தது.
அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்களான துன்புறுத்துதல், பாலியல் வன்முறை, தாக்குதல், திருமணம் தொடர்பான குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு எதிரான இந்த குற்றங்களில், குற்ற பேரம் பொருந்தாது.
சட்டப்படி பைசல்
எனவே, கீழமை நீதிமன்றங்களில், குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்ட உடன், தண்டனை குறைப்பு பேரம் கோர தகுதியானவர்களிடம், அவர்களுக்கான உரிமை குறித்து, மாஜிஸ்திரேட் தெரிவிக்க வேண்டும்.
அதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புக் கொண்டால், அதற்கான மனு தாக்கல் செய்ய, உரிய அவகாசம் அளிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களும், 30 நாட்களுக்குள் தங்கள் உரிமையை செயல்படுத்த வேண்டும்.
சட்டப் பணிகள் ஆணைக் குழுவுடன் தொடர்புடையவர்களின் உதவியை, நீதிமன்றங்கள் பெறலாம். இந்த வழக்கைப் பொறுத்தவரை, தண்டனை குறைப்பு பேரம் கோரி, மனுதாரர் விண்ணப்பம் அளித்தால், அதை, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு எடுத்து, சட்டப்படி பைசல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.