நாட்டின் பாதுகாப்பிற்கு கோம்பை நாய்களை பயன்படுத்தலாம்
நாட்டின் பாதுகாப்பிற்கு கோம்பை நாய்களை பயன்படுத்தலாம்
UPDATED : மார் 20, 2025 12:00 AM
ADDED : மார் 20, 2025 09:08 AM
தேனி:
தேனி மாவட்டம், கோம்பை நாட்டு இன நாய்களை நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கு பயன்படுத்தினால் அழிவில் இருந்து பாதுகாக்கப்படும் என கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த மண்டல கருத்தரங்கில் பங்கேற்ற உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இக்கல்லுாரியின் விலங்கின மரபியல் மற்றும் இனவிருத்தித்துறையின் சார்பில், மண்டல அளவிலான கோம்பை நாய் மரபியல் வளப்பாதுகாப்பு கருத்தரங்கு, நாய்கள் கண்காட்சி, செல்லப்பிராணிகள் நல முகாம் நடந்தது. விழா மலரை தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டு, கண்காட்சியை துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் பொன்னுத்துரை முன்னிலை வகித்து பேசியதாவது: கோம்பை நாய்கள் மனிதர்களை விட 10 ஆயிரம் மடங்கு மோப்ப சக்தி திறன் கொண்டது. அதனால்தான் இவற்றை காவல்காரன்,வேட்டைக்காரன், செல்லப்பிராணிகளாகவும் வளர்த்து வருகின்றனர். கோம்பை நாய்கள் எந்த சூழ்நிலையிலும் வாழும் தன்மை கொண்டது. இதை பராமரிப்பது எளிது. அடிபணிதல், விசுவாசம் உள்ளிட்ட காரணங்களால் பெரிதும் விரும்பி வளர்க்கின்றனர்.
கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய நாயினங்கள் தமிழகத்தில்வளர்க்கப்படும் முக்கிய நாட்டின நாய்களாகும். இருப்பினும் சமீபகாலமாக மக்களிடையே வெளிநாட்டு நாயினங்கள் மீது மோகம் அதிகரித்ததால், நாட்டு இன நாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறிப்பாக கோம்பை நாயினங்கள் மிக குறைந்துவிட்டன. இதனால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இக்கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அன்பழகன் உட்பட பலர் பேசினர்.
பங்கேற்ற கோம்பை நாய் இன உரிமையாளர்கள் கூறுகையில், நாட்டின நாய்களான சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கோம்பையின நாய்கள் அழிந்து வரும் பட்டியலில் உள்ளன. நாட்டு நாய்கள் பாதுகாப்பு கருத்தரங்குகள் அனைத்து கால்நடை மருத்துவ கல்லுாரிகளிலும் நடத்த வேண்டும் என்றனர்.
கண்காட்சியில் உத்தரவிற்கு அடிபணிதல், சிறப்பு திறன்கள் அடிப்படையில் சிறந்த நாய் தேர்வு நடந்தது. இதில் மதுரை துவரிமானை சேர்ந்த சியாம் வளர்க்கும் கோம்பை நாய் ராக்கி முதல் பரிசு பெற்றது. பொள்ளாச்சி ராமநாதன் - துர்காதேவி தம்பதியினர் வளர்க்கும் கோம்பை நாய் வேள்பாரி 2ம் பரிசு பெற்றது.
அவர்கள் கூறியதாவது:
பல மடங்கு அபார திறன்களை கொண்ட கோம்பை நாட்டு இன நாய்களை இந்தியாவின் பாதுகாப்பு படைகளில் பயன்படுத்த வேண்டும். 2018ல் பிரதமர் மோடி, நாட்டின நாய்களை நாட்டின் பாதுகாப்பில் பயன்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அதன் பயனாக பெங்களூரூவில் உள்ள சி.ஆர்.பி.எப்., படையினர் கோம்பை நாய் குட்டிகளை வாங்கி சென்று, பயிற்றுவித்து அவை சிறப்பாக பணி செய்கிறது' என்றார். கண்காட்சியில் கோம்பை நாய்கள் 20, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி நாய்கள் 20, வெளிநாட்டு நாயினங்கள் 43 என 83 நாய்கள் பங்கேற்றன.