ஜாதி மோதல் எதிரொலி: பள்ளி ஆசிரியர்களை கூண்டோடு மாற்ற முடிவு
ஜாதி மோதல் எதிரொலி: பள்ளி ஆசிரியர்களை கூண்டோடு மாற்ற முடிவு
UPDATED : ஜூலை 16, 2024 12:00 AM
ADDED : ஜூலை 16, 2024 10:42 AM

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுடைய ஜாதி ரீதியிலான மோதல்கள் ஏற்பட்ட 7 அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் 250க்கும் மேற்பட்டவர்கள் கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இம்மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களிடைய ஜாதி ரீதியான மோதல்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. நாங்குநேரி, வள்ளியூர் பள்ளிகளை தொடர்ந்து அண்மையில் மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ஜாதி மோதல் ஏற்பட்டது.
எனவே கலெக்டர் கார்த்திகேயன் பரிந்துரையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கங்கைகொண்டான், திருநெல்வேலி டவுன், மருதகுளம், நாங்குநேரி, கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுடன் சேர்ந்து கூண்டோடு மாற்றம் செய்யப்படுகின்றனர்.
இதற்காக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் கோபிதாஸ் திருநெல்வேலியில் தங்கி ஆலோசனை மேற்கொண்டார். 250க்கும் மேற்பட்டோர் மாற்றம் செய்யப்படுவதால் வேறு பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படும்.
எனவே 30க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் இத்தகைய மாற்றம் நிகழும். இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நேற்று சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசினார்.